'முன்பை விட தற்போது நலம்': உடல்நலக்கவலைகளுக்கு விண்வெளியிலிருந்து பதிலளித்த சுனிதா வில்லியம்ஸ்
நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் தனது உடல்நிலை குறித்த சமீபத்திய ஊகங்களுக்கு சமீபத்தில் பதிலளித்துள்ளார். அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) நல்ல நிலையில் இருப்பதாக பொதுமக்களுக்கு உறுதியளித்தார். ஒரு வீடியோ நேர்காணலில், சுனிதா வில்லியம்ஸ், டெய்லி மெயில் மற்றும் தி நியூயார்க் போஸ்ட் போன்ற ஊடகங்கள் எழுப்பிய கவலைகளுக்கு பதிலளித்தார். அந்த செய்திகள் சமீபத்திய புகைப்படங்களின் அடிப்படையில் அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகக் கூறியது. "நான் இங்கு வந்தபோது நான் இருந்த அதே எடைதான்" என்று சுனிதா வில்லியம்ஸ் உறுதியாகக் கூறினார். அதோடு சமீபத்திய படங்களில் அவர் "மோசமான நிலையில்" தோன்றினார் என்ற கூற்றுக்களை எதிர்த்தார்.
கடுமையான உடற்பயிற்சியே உருவத்தில் மாற்றம் ஏற்பட காரணம்
தசை மற்றும் எலும்பு அடர்த்தியில் மைக்ரோ கிராவிட்டியின் விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்காக விண்வெளி வீரர்கள் கடைபிடிக்கும் கடுமையான உடற்பயிற்சி முறையால் அவரது உடல் தோற்றம் மாறிவிட்டது என்று சுனிதா வில்லியம்ஸ் விளக்கினார். தொடர்ந்து சுனிதா வில்லியம்ஸ் தனது தினசரி ஒர்க்அவுட் வழக்கத்தை விவரித்தார். அதில் உடற்பயிற்சி சைக்ளிங் ஓட்டுவது, டிரெட்மில்லில் ஓடுவது மற்றும் பளு தூக்குதல் ஆகியவை அடங்கும். இந்த நடவடிக்கைகள் அவளது உடலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு வழிவகுத்தன என அவர் கூறினார். இந்த மாற்றங்களுக்கு தனது தொடர்ச்சியான பளு தூக்குதல் முயற்சிகள் காரணம் எனவும் கூறினார். ISS-இல் சுனிதா வில்லியம்ஸின் தங்குதல் பயணம் ஜூன்-6 அன்று தொடங்கியது, அவரும் சக நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் அங்கே தங்கியுள்ளனர்.