இந்தியாவில் காலூன்றும் எலான் மஸ்க்: டெல்லியில் ஸ்டார்லிங்க் முதல் அலுவலகம் திறப்பு
செய்தி முன்னோட்டம்
உலக புகழ்பெற்ற தொழிலதிபர் எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் இணைய சேவை நிறுவனம், வட இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தை தலைநகர் டெல்லியில் அமைத்துள்ளது. இது இந்தியாவில் அந்நிறுவனத்தின் வர்த்தக விரிவாக்கத்திற்கான மிக முக்கியமான நகர்வாகக் கருதப்படுகிறது. டெல்லியின் நௌரோஜி நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வேர்ல்ட் ட்ரேட் சென்டர் (World Trade Center) வளாகத்தில், 50 பேர் பணிபுரியும் வசதியுடன் கூடிய அலுவலகத்தை ஸ்டார்லிங்க் நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது. இதே வளாகத்தில்தான் உலக புகழ்பெற்ற OpenAI நிறுவனமும் தனது இந்திய அலுவலகத்தை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு
ஏன் டெல்லியை தேர்வு செய்தது Starlink?
தொலைத்தொடர்பு மற்றும் விண்வெளி சார்ந்த சேவைகளை இந்தியாவில் வழங்க மத்திய அரசின் பல்வேறு அனுமதிகள் தேவைப்படுகின்றன. இந்திய அரசின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அதிகாரிகள் மற்றும் தொலைத்தொடர்புத் துறை (DoT) சார்ந்தவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதற்காகவே ஸ்டார்லிங்க் நிறுவனம் டெல்லியைத் தனது மையமாகத் தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிகிறது.
சேவை
விரைவில் இந்தியாவில் சேவை தொடங்கும்
இந்தியாவில் சாட்டிலைட் மூலம் அதிவேக இணையச் சேவையை வழங்க ஸ்டார்லிங்க் நிறுவனம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஏற்கனவே மகாராஷ்டிர அரசுடன் அரசு அலுவலகங்கள் மற்றும் கிராமங்களுக்கு இணையச் சேவை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம், இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணையச் சேவைக்கான வணிக அனுமதி (Licence) விரைவில் கிடைக்கப் போவதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளதாகத் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்டார்லிங்கின் டெல்லி அலுவலகம், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மும்பையில் நிறுவனத்தின் சிறிய அமைப்பை பின்பற்றுகிறது, இது நாடு தழுவிய வெளியீட்டிற்கு முன்னதாக அதன் இந்திய இருப்பை படிப்படியாக அதிகரிப்பதை குறிக்கிறது.