எம்பிஏ படிப்பே தேவையில்லை; பிசினஸ் பள்ளிகளை மூடுமாறு ஸ்ரீதர் வேம்பு ஆலோசனை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் செயல்பட்டு வரும் பாரம்பரிய பிசினஸ் பள்ளிகளை மூடிவிட்டு, அதற்கு பதிலாக புதிய தொழில்களை ஊக்குவிக்கும் ஸ்டார்ட்அப் இன்குபேட்டர் மையங்களை நிறுவ வேண்டும் என ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பிசினஸ் பள்ளியின் பேராசிரியர் கிறிஸ் மார்க்விஸ் எழுதிய கட்டுரைக்கு ஆதரவு தெரிவித்து அவர் இக்கருத்தை பகிர்ந்துள்ளார். கடந்த இரண்டு தசாப்தங்களாக தாம் இதே கருத்தைக் கொண்டுள்ளதாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்முனைவோர்
வெறும் பட்டதாரிகளை விட தொழில்முனைவோரே நாட்டிற்குத் தேவை
இந்தியாவிற்கு தற்போது மேலாண்மை பட்டம் பெற்ற பட்டதாரிகளை விட, புதிய யோசனைகளுடன் தொழில்களைத் தொடங்கும் தொழில்முனைவோரே அதிகம் தேவைப்படுகிறார்கள் என ஸ்ரீதர் வேம்பு சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய எம்பிஏ படிப்புகள் கணக்கியல், விற்பனை மற்றும் பணியாளர் சேர்க்கை போன்ற குறிப்பிட்ட பணிகளை மட்டுமே கற்பிக்கின்றன.
மாறாக, புதிய நிறுவனங்களை உருவாக்கி, அதில் தவறுகளை செய்து கற்றுக்கொள்ளும் நடைமுறை பயிற்சியை பிசினஸ் பள்ளிகள் வழங்குவதில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
எனவே இன்குபேட்டர் மையங்களே தற்போதைய தேவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்டார்ட்அப் கலாச்சாரம்
இந்தியாவில் அதிகரித்து வரும் ஸ்டார்ட்அப் கலாச்சாரம் மற்றும் வளர்ச்சி
மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் தரவுகளின்படி, இந்தியாவில் தற்போது 2.5 லட்சத்திற்கும் அதிகமான அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவை நாட்டின் 770-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவி இருப்பதுடன், சுமார் 25.42 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
மேலும் 52 சதவீதத்திற்கும் அதிகமான ஸ்டார்ட்அப்கள் பெருநகரங்களுக்கு வெளியே உள்ள சிறிய நகரங்களில் இருந்து இயங்கி வருகின்றன.
இருப்பினும் நிதி உதவிகளைத் தாண்டி, புதிய சிந்தனைகளை உருவாக்குவதே முக்கியமானது என ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில் தொழில்முனைவோரின் எதிர்காலம்
வேலைவாய்ப்பில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) தாக்கம் குறித்துப் பேசிய ஸ்ரீதர் வேம்பு, எதிர்காலத்தில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒரு தனிநபர் 10 பேரின் வேலையை செய்ய முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் கணினி சார்ந்த பணிகளை செய்யும் தொழில்துறைகள் தங்களின் வேலைப் பகிர்வு முறையை மாற்றியமைக்க நேரிடும்.
சிக்கலான பிரச்சினைகளை சிறிய பணிகளாக பிரித்து தீர்வு காண்பதே எதிர்காலத்திற்குத் தேவையான முதன்மைத் திறனாகும்.
இத்தகைய உயர்மட்டத் திறன்களைப் பாரம்பரிய பிசினஸ் பள்ளிகளால் வழங்க முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.