வாரம் ஒரு டன் எடையில் விழும் ராக்கெட் கழிவுகள்! பூமியை நோக்கிப் பாயும் விண்வெளி குப்பைகள்; நிபுணர்கள் அதிர்ச்சி எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
உலகளவில் ராக்கெட் ஏவுதல்கள் மற்றும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும் விண்வெளிக் கழிவுகளின் அளவும் ஆபத்தான முறையில் உயர்ந்து வருகிறது. பெரும்பாலான கழிவுகள் வளிமண்டலத்தில் உராய்ந்து எரிந்து சாம்பலாகி விட்டாலும் அல்லது கடலில் விழுந்தாலும், சுமார் ஒரு மெட்ரிக் டன் எடையுள்ள மிகப்பெரிய விண்வெளிப் பொருட்கள் வாரத்திற்கு ஒருமுறை என்ற விகிதத்தில் வளிமண்டலத்திற்குள் நுழைவதாகப் போலந்து விண்வெளி முகமையின் செயல்பாட்டுத் தலைவர் மரியுஸ் ஸ்லோனினா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
புள்ளிவிவரம்
அமெரிக்க விண்வெளிப் படையின் அதிர்ச்சி புள்ளிவிவரம்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகவும் அரிதாக நிகழ்ந்த இந்த விண்வெளி கழிவுகளின் வீழ்ச்சி, தற்போது தினசரி நிகழ்வாக மாறியுள்ளது.
அமெரிக்க விண்வெளிப் படை வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவலின்படி, கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 820 பெரிய விண்வெளிப் பொருட்கள் பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைந்துள்ளன.
இது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு பதிவான 110 பொருட்களுடன் ஒப்பிடும்போது பல மடங்கு அதிகமாகும்.
கடந்த ஆண்டில் மட்டும் உலகளவில் 300க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டது இந்த அளவுக்குக் காரணம் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.
கழிவுகள்
குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் விழும் கழிவுகள்
சமீபகாலமாக சர்வதேச விண்வெளி நிலையத்தின் கழிவு பாகங்கள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஒரு வீட்டின் மீதும், ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டின் பாகங்கள் போலந்து நாட்டிலும் விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
அதேபோல செயலிழந்த சீன செயற்கைக்கோள் ஒன்று ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு மேலே வெடித்து சிதறியதுடன், கென்யாவில் உள்ள விவசாய நிலம் ஒன்றில் ராக்கெட்டின் பிரம்மாண்ட உலோக வளையம் ஒன்று விழுந்தது.
மேலும் ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இது போன்ற அரிய விண்வெளி உதிரி பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆபத்து
முன்கூட்டியே கணிக்க முடியாத பாதையும் மனித உயிருக்கு ஆபத்தும்
கட்டுப்பாடற்ற விண்வெளி குப்பைகள் பூமியில் சரியாக எந்த இடத்தில் விழும் என்பதைக் துல்லியமாகக் கணிப்பது தற்போதைய தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
வளிமண்டலத்திற்குள் நுழையும் நேரத்தில் ஒரே ஒரு நிமிடம் கணக்கீடு மாறினால் கூட, அது விழும் இடம் சுமார் 300 மைல்கள் தூரம் வரை மாறிவிடும்.
வளிமண்டலத்திலேயே முழுமையாக எரிந்து சாம்பலாகும் பொருட்களைப் பயன்படுத்த நிறுவனங்களுக்குப் பல நிபுணர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முறையான சர்வதேசக் கட்டுப்பாடுகள் வராத பட்சத்தில், எதிர்காலத்தில் மனித உயிரிழப்புகள் ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.