இனி 'Tweetdeck'-ஐ பயன்படுத்தவும் கட்டணம், ட்விட்டரின் புதிய அறிவிப்பு
ட்விட்டரில் பல்வேறு பக்கங்களில் இருந்து ஒரே நேரத்தில் அப்டேட்களை அறிந்து கொள்ளும் வகையில் ட்வீட்டெக் (Tweetdeck) என்ற வசதியை அளித்து வந்தது ட்விட்டர். இந்த வசதியானது, வணிக நிறுவனங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை இந்த வசதி இலவசமாக அளிக்கப்பட்டு வந்த நிலையில், இனி ட்விட்டர் ப்ளூவுக்கு சந்தா செய்தவர்களால் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும் எனப் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். இந்த புதிய அறிவிப்பானது அடுத்த 30 நாட்களில் அமலுக்கு வரும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. அதாவது, 30 நாட்களுக்குள் ட்விட்டர் ப்ளூ சேவைக்கு சந்தா செய்யவில்லை என்றால், நம்மால் ட்வீட்டெக்கைப் பயன்படுத்த முடியாது.
வருவாயை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எலான் மஸ்க்:
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு, அத்தளத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். ஆனால், கடந்த சில மாதங்களாக ட்விட்டர் வெளியிடும் புதிய அறிவிப்புகள் எல்லாமே வருவாயை உயர்த்துவதை மையமாகக் கொண்ட அறிவிப்புகளாவே இருக்கின்றன. முக்கியமாக, இதுவரை ட்விட்டரில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த சேவைகளை முழுமையாகவோ அல்லது குறிப்பிட்ட அளவிலோ ட்விட்டர் ப்ளூ சேவைக்குள் கொண்டு சென்று கொண்டிருக்கிறார் எலான் மஸ்க். சில நாட்களுக்கு முன்பு, வெரிஃபை செய்யப்பட்ட ட்விட்டர் பயனர்கள் ஒரு நாளில் 10,000 ட்வீட்கள் வரை பார்க்க முடியும் என்றும், இலவச பயனர்கள் 1,000 ட்வீட் வரை மட்டுமே பார்க்க முடியும் என்றும் புதிய அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.