LOADING...
இன்று பூமியைத் தாக்கும் சக்திவாய்ந்த சூரியப் புயல்: இந்தியாவில் தோன்றப்போகும் Aurora
சூரியப் புயல் இன்று பூமியின் காந்தப்புலத்தை தாக்கவுள்ளன

இன்று பூமியைத் தாக்கும் சக்திவாய்ந்த சூரியப் புயல்: இந்தியாவில் தோன்றப்போகும் Aurora

எழுதியவர் Venkatalakshmi V
Jun 08, 2026
11:30 am

செய்தி முன்னோட்டம்

சூரியனில் ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த மாற்றங்களால், இன்று திங்கள்கிழமை (ஜூன் 8) பூமிக்கு விண்வெளி வானிலை ஆராய்ச்சி மையங்கள் (SWPC) 'G3' அளவிலான புவிக்காந்தப் புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளன. கடந்த ஜூன் 6-ஆம் தேதி காலை, சூரியனின் மேற்பரப்பில் உள்ள 'ஆக்டிவ் ரீஜியன் 4461' என்ற பகுதி பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இந்த வெடிப்பின் போது விண்வெளியில் உமிழப்பட்ட கோடிக்கணக்கான டன் காந்த வாயுக்கள் மற்றும் பிளாஸ்மா துகள்கள் தற்போது நொடிக்கு 1,400 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. அவை இன்று பூமியின் காந்தப்புலத்தைத் தாக்கவுள்ளன. அது பூமியைத் தாக்குவதற்கு 15 முதல் 60 நிமிடங்களுக்கு முன்பே இறுதி எச்சரிக்கை வெளியாகும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விளக்கம்

சூரியப் புயல் என்றால் என்ன?

சூரியனின் மேற்பரப்பில் காந்த ஆற்றல் திடீரென வெடித்துச் சிதறும்போது அதிகப்படியான கதிர்வீச்சு வெளியாகும். இது 'சூரியச் சுடர்' (Solar Flare) எனப்படும். இந்த வெடிப்பின் போது வெளிவரும் காந்த வாயு மேகங்கள் விண்வெளியில் மணிக்கு லட்சக்கணக்கான கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து பூமியின் பாதுகாப்பு வளையத்தை தாக்கும் நிகழ்வே புவிக்காந்தப் புயல் என்று அழைக்கப்படுகிறது.

பாதிப்பு

இதன் பாதிப்புகள் என்னென்ன?

புவிக்காந்தப் புயல்களின் தீவிரம் G1 முதல் G5 வரை அளவிடப்படுகிறது. தற்போதைய புயல் G3 மட்டத்தில் கணிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் இது G4 (மிகக் கடுமையான) மட்டத்தை எட்டவும் வாய்ப்புள்ளது. சூரியப் புயலின் துகள்கள் பூமியின் வளிமண்டல வாயுக்களுடன் மோதும்போது, இரவு வானில் பச்சை, ஊதா மற்றும் சிவப்பு நிறங்களில் கண்கவர் ஒளி அலைகள்(Aurora) தோன்றும். பொதுவாக வட மற்றும் தென் துருவங்களில் மட்டுமே தெரியும் இந்த ஒளி அலைகள், இந்த முறைபூமியின் மத்திய அட்சரேகை பகுதிகளிலும் தெரிய வாய்ப்புள்ளது. இந்த புயலால் உயர் அதிவெண் (HF) ரேடியோ தொடர்புகள், செயற்கைக்கோள் வழித்தடங்கள் (GPS) மற்றும் மின் விநியோகக் கட்டமைப்புகளில் லேசான மின்தடை அல்லது அலைவரிசை கோளாறுகள் தற்காலிகமாக ஏற்படலாம்.

Advertisement

எங்கே காணலாம்?

வானில் தோன்றும் அதிசய ஒளி: இந்தியாவில் தெரியுமா?

கடந்த 2024 மே மாதத்தில் ஏற்பட்ட மிகக் கடுமையான G5 புயலின் போது, இந்தியாவின் லடாக் போன்ற வடக்குப் பகுதிகளிலேயே அரோரா ஒளிக்காட்சிகள் தென்பட்டன. விண்வெளி வானிலை விஞ்ஞானி தமிதா ஸ்கோவ் கணிப்பின்படி, இன்றைய புயலின் தீவிரத்தைப் பொறுத்து இந்தியாவின் வட பகுதிகள், மத்திய ஐரோப்பா, அமெரிக்காவின் வட மாநிலங்கள், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள மக்கள், வானம் மேகமூட்டமின்றி தெளிவாக இருக்கும் பட்சத்தில் இன்று இரவு இந்த அதிசய ஒளியைக் காண முடியும். சூரியனில் இருந்து புறப்பட்ட இந்தக் காந்த மேகம், பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்காணிப்பு செயற்கைக்கோள்களைக் கடக்கும்போதுதான் இதன் துல்லியமான தாக்க வீரியம் தெரியவரும்.

Advertisement