ரஷ்ய அதிபர் புதினைப் போலவே தோற்றமளித்து, புதினிடமே கேள்வி எழுப்பிய AI
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் டீப் ஃபேக் காணொளிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் புகைப்படங்கள் பெரும் பேசு பொருளாகியிருக்கின்றன. இந்நிலையில், ரஷ்யாவில் அந்நாட்டு அதிபரைப் போலவே தோற்றமளிக்கும் AI மாடல் ஒன்று ரஷ்ய அதிபரிடமே கேள்வி எழுப்பும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியிருக்கிறது. அந்தக் காணொளியில் AI உதவியுடன் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப புதினின் இரைட்டையானது, அதிபர் புதினிடம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற ரீதியில் கேள்விகளை முன்வைக்கிறது. இந்த காணொளியானது இணையத்தில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
அதிபர் புதினிடம் கேள்வி எழுப்பிய AI:
ரஷ்ய மக்கள் அந்நாட்டு அதிபருடன் பேசுவதற்கான வாய்ப்பு ஆண்டுக்கு ஒருமுறை கிடைக்கும். ஆம், தொலைபேசி வாயிலாக, அதிபர் புதினிடம் கேட்க வேண்டிய கேள்விகளை மக்கள் கேட்டும் நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பாகும். அந்த நிகழ்விலேயே அதிபர் புதினைப் போலத் தோற்றமளிக்கும் AI ஒன்று திரையில் தோன்றி, புதினிடம் AI-யின் பாதகங்கள் குறித்த கேள்விகளை முன்வைத்திருக்கிறது. புதினைப் போல தோற்றமளித்தது மட்டுமல்லாமல், அவருடைய குரல், அவருடைய நடை உடை பாவனைகளையும் அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறது அந்த AI மாடல். இது ஒரு பக்கம் ரசிக்கக்கூடிய வகையிலான விஷயமாக இருந்தாலும், தவறாகப் பயன்படுத்தப்படும் பட்சத்தில் இந்த விதமான தொழில்நுட்பங்களால் ஏற்படும் பாதிப்புகளையும் நாம் புறம் தள்ளிவிட முடியாது என்பது தான் உண்மை.