பனிப்பாறையை ஆட்டு கம்பளி ஆடை போட்டு மூடிய விஞ்ஞானிகள்! பனி உருகுவது 70% குறைந்தது
செய்தி முன்னோட்டம்
சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகுவதைத் தடுக்க விஞ்ஞானிகள் ஒரு புதுமையான முயற்சியைக் கையாண்டுள்ளனர். சாண்ட்ஃப்ளூரான் என்ற பனிப்பாறையின் ஒரு பகுதியில் இயற்கையான ஆட்டு கம்பளி போர்வைகளைப் போர்த்தி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். கோடைகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் முடிவில், வழக்கமாக உருகும் பனியின் அளவை விட சுமார் 50 முதல் 70 சதவீதம் வரை பனி உருகுவது குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளனர்.
மாற்று யோசனை
பிளாஸ்டிக் கழிவுகளுக்கு மாற்றான இயற்கை யோசனை
சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா போன்ற நாடுகளின் பனிச்சறுக்கு மையங்களில் பனிப்பாறைகளைப் பாதுகாக்க செயற்கை பிளாஸ்டிக் தார்ப்பாய்களே இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்தன.
ஆனால், சூரிய ஒளியால் அந்தச் செயற்கை ஆடைகள் சிதைந்து, பனி உருகுநீரில் நுண் பிளாஸ்டிக் கழிவுகளாகக் கலக்கும் அபாயம் ஏற்பட்டது.
இதற்கு மாற்றாக, தூக்கி எறியப்படும் ஆட்டு கம்பளிகளைப் பயன்படுத்தி மட்கக்கூடிய இயற்கை போர்வைகளை லொசான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெற்றிகரமாகப் தயாரித்து சோதித்துள்ளனர்.
சிறப்பம்சங்கள்
ஆட்டு கம்பளி போர்வையின் சிறப்பம்சங்கள் மற்றும் செயல்திறன்
சுவிஸ் ஜவுளி நிறுவனமான ஃபிசோலான் தயாரித்த இரண்டு கம்பளி போர்வைகள் சுமார் 200 சதுர மீட்டர் பரப்பளவில் பனிப்பாறையின் மீது பரப்பப்பட்டன.
இந்த வெளிறிய நிறக் கம்பளிகள் சூரிய ஒளியைப் பிரதிபலித்து, அடியில் உள்ள பனிக்கு வெப்பம் ஊடுருவுவதைத் திறம்படத் தடுத்தன.
பயன்பாடின்றி வீணாகும் 40 முதல் 70 சதவீத ஆட்டு கம்பளிகளைச் சேகரித்து, சுற்றுச்சூழல் பாதிப்பற்ற வகையில் பனிப்பாறைகளைப் பாதுகாக்கப் பயன்படுத்த முடியும் என்பதை இந்த சோதனை உறுதி செய்துள்ளது.
தீர்வு
புவி வெப்பமயமாதலுக்கு இது முழுமையான தீர்வா?
இந்த ஆய்வு நம்பிக்கையளிக்கும் முடிவுகளைத் தந்திருந்தாலும், இது புவி வெப்பமயமாதலுக்கு முழுமையான தீர்வாகாது என ஆய்வாளர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்.
சோதனை செய்யப்பட்ட பகுதி பனிப்பாறையின் 0.02 சதவீதப் பரப்பு மட்டுமே என்பதால், ஒட்டுமொத்த பனிப்பாறைகளுக்கும் கம்பளி போர்த்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை.
எனவே, பனிப்பாறைகள் முழுமையாக அழிவதைத் தடுக்க உலகளாவிய புவி வெப்பமயமாதலையும், பசுமைக்குடில் வாயு உமிழ்வையும் குறைப்பதே ஒரே நிரந்தரத் தீர்வாகும்.