பூமிக்கு அழிவை ஏற்படுத்தும் புதிய ஆபத்து.. கண்டறிந்த விஞ்ஞானிகள்!
விண்வெளியில் இருந்து பூமி போன்ற கோள்களுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய புதிய வகை ஆபத்து ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சூப்பர்நோவா என்ற பெருவெடிப்புக்குளாகும் நட்சத்திரங்களில் இருந்து வெளியாரும் எக்ஸ்ரே கதிர்கள் 100 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்திருக்கும் கோள்களையும் தாக்கி அழிவை உண்டாக்கும் திறனைக் கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கின்றனர். ஒரு பெருவெடிப்பு நிகழ்ந்து, பல மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து கூட அது பிற கோள்களைத் தாக்கலாம் எனக் கண்டறிந்துள்ளனர். இதுவரை 31 சூப்பர்நோவா பெருவெடிப்புகளையும் அதனால் ஏற்படும் தாக்கங்களையும் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தனர் விஞ்ஞானிகள். அவை சுமார் 160 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள கோள்களிலும் கதிர்வீச்சு பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றது தெரிய வந்திருக்கிறது.
என்ன விதமாக பாதிப்புகள்?
இதன் மூலம் தாக்கப்படும் பூமி போன்ற கோள்களின் வலிமண்டலத்தின் மொத்த வேதியியலும் மாற்றியமைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும், அக்கோளின் ஓசோன் போன்ற படலம் இருந்தால், அந்தப் படலமே அழிவதற்கான வாய்ப்பும் இருக்கிறதாம். பூமிக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய தூரத்தில் இவ்வாறான நட்சத்திரங்கள் எதுவும் தற்போது இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கடந்த காலத்தில், 2 மில்லியன் முதல் 8 மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் பூமிக்கு அருகில் 65 - 500 ஒளியாண்டுகள் தொலைவில் இவ்வாறான சூப்பர்நோவா பெருவெடிப்பு ஏற்பட்டதும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. சூப்பர்நோவாவில் இருந்து வரும் எக்ஸ்ரேவை ஆய்வு செய்வதன் மூலம் நட்சத்திரங்களில் வாழ்க்கை சக்கரத்தைப் பற்றி மட்டுமல்லாது, நம்முடைய பழங்காலத்தைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.