சாம்சங் S25 சீரிஸ் கேமரா குறித்து இணையத்தில் கசிந்த தகவல்கள்
தற்போது உலகமெங்கும் விற்பனையில் இருக்கும் சாம்சங்கின் ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் S23 சீரிஸானது இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெளியாகவிருக்கும் S24 சீரிஸின் அறிவிப்பு குறித்த தகவல்களே இன்னும் வெளியாகாத நிலையில், அதனைத் தொடர்ந்து வெளியிடப்படவிருக்கும் சாம்சங் கேலக்ஸி S25 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் குறித்த தகவல்கள் கசியத் தொடங்கிவிட்டன. தற்போது வரை தங்களுடயை ப்ரீமியம் மற்றும் ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு, தங்களுடைய தயாரிப்பான ISOCELL GN3 கேமார சென்சார்களையே பயன்படுத்தி வந்திருக்கிறது சாம்சங். ஆனால், S25 சீரிஸில் தங்களுடைய தயாரிப்புக்குப் பதிலாக, சோனியின் கேமரா சென்சார்களைப் பயன்படுத்த சாம்சங் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.
சாம்சங் ப்ரீமியம் போன்களின் கேமரா சென்சார்கள்:
சாம்சங் வெளியிட்ட கடந்த நான்கு ப்ரீமியம் போன்களில் ISOCELL சென்சார்களே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கேலக்ஸி S23, கேலக்ஸி S23+, கேலக்ஸி Z ஃபோல்டு 4 மற்றும் கேலக்ஸி Z ஃபோல்டு 5 என நான்கு போன்களிலுமே சாம்சங்கின் கேமரா சென்சார் தான். S23 மற்றும் S23+ ஸ்மார்ட்போன்களில் ISOCELL GN3 50MP சென்சார் பயன்படுத்தப்பட்ட நிலையில், அடுத்து வெளியாகவிருக்கும் S24 மற்றும் S24+ மாடல்களிலும் இதே சென்சாரையே பயன்படுத்தவிருக்கிறது சாம்சங். ஒவ்வொரு ஆண்டும் ஒரு ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் என்ற கணக்கில், 2025ம் ஆண்டு வெளியாகவிருக்கும் S25 மற்றும் S25+ ஸ்மார்ட்போன்களிலேயே சோனியின் கேமரா சென்சார்களைப் பயன்படுத்தவிருக்கிறது சாம்சங். எனினும், அல்ட்ரா மாடலில் ISOCELL சென்சாரே பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.