'பிங்' சேவையை வழங்கும் முடிவில் இருந்து பின்வாங்கியது சாம்சங்.. ஏன்?
தங்களுடைய ஸ்மார்ட்போன்களில் கூகுள் தேடுபொறி உட்பட பிற கூகுள் சேவைகளையும் இயல்புநிலையாகவே கொடுத்து வருகிறது சாம்சங். கடந்த சில மாதங்களுக்கு முன் AI வசதிகளுடன் கூடிய தேடுபொறி சேவையான 'பிங்'கை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, அதனை தங்களுடைய சாதனங்களில் சாம்சங் வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியானது. ஆனால், அந்த முடிவை தற்போது சாம்சங் கைவிட்டிருப்பதாகத் தெரிகிறது. இன்னும் சில காலத்திற்கு சாம்சங் தங்களுடைய சாதனங்களில் வழங்கும் கூகுள் சேவைகளில் எந்த மாற்றங்களும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் 'பிங்'கை இயல்புநிலை தேடுபொறியாக வழங்கும் முடிவை எடுத்திருந்தால், அது கூகுளுக்கு மிகப்பெரிய பின்னடைவாகவும், மைக்ரோசாப்டிற்கு கூடுதல் எழுச்சியையும் அளித்திருக்கும்.
ஏன் முதலில் 'பிங்'கிற்கு மாறுவது குறித்து ஆலோசித்தது சாம்சங்?
சாம்சங் ஸ்மார்ட்போன்களில், ஒரே நிறுவனத்தின் சேவைகள் மட்டும் இல்லாமல் பலதரப்பட்ட நிறுவனங்களின் சேவைகளையும் வழங்கலாம் எண்ணத்தின் காரணமாகவே 'பிங்' தேடுபொறியை வழங்குவது குறித்து ஆலோசித்து வந்தது அந்நிறுவனம். ஆனால், இது பயனர்களிடம் என்ன விதமான எதிர்வினையை ஏற்படுத்தும் மற்றும் கூகுளுடன் கொண்ட வணிகத் தொடர்பு ஆகியவற்றின் காரணமாக இந்த முடிவைக் கைவிட்டிருக்கிறது சாம்சங். தேடுபொறி சந்தையில் 93%-உடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது கூகுள். பிங் தேடுபொறியின் பங்கு வெறும் 3% மட்டுமே. மேலும், தங்களுடைய சாதனங்களில் கூகுள் தேடுபொறி மற்றும் பிற சேவைகளை இயல்புநிலை சேவைகளாக அளிக்க ஆப்பிள் மற்றும் சாம்சங்குடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது கூகுள். இதற்காக ஆப்பிள் நிறுவனத்திற்கு வருடத்திற்கு 8 முதல் 12 பில்லியன் டாலர்களை கூகுள் வழங்குவதாகத் தெரிகிறது.