ஜூலையில் 'கேலக்ஸி அன்பேக்டு' நிகழ்வு.. உறுதி செய்தது சாம்சங்!
கூகுளின் I/O நிகழ்வு, ஆப்பிளின் WWDC-யைத் தொடர்ந்து தற்போது சாம்சங் நிறுவனமும் தங்களது கேலக்ஸி அன்பேக்டு (Galaxy Unpacked) நிகழ்வை வரும் ஜூலை மாதம் நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது. பெரிய டெக் நிறுவனங்கள் தங்களுடைய புதிய ப்ளாக்ஷிப் சாதனங்கள் மற்றும் மென்பொருள் அப்டேட்கள் குறித்த அறிவிப்பை வருடாந்திர நிகழ்வுகளை நடத்தி அறிவிக்கும் வழக்கும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்களுடைய நிகழ்வுகளை நடத்தி முடித்திருக்கும் நிலையில், தற்போது சாம்சங்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை நடத்தவிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்திலேயே தங்கள் அன்பேக்டு நிகழ்வை சாம்சங் நடத்துவது வழக்கம். ஆனால், இந்த வருடம் ஜூலையிலேயே கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை நடத்தவிருக்கிறது.
சாம்சங்கின் கேலக்ஸி அன்பேக்டு:
ஒவ்வொரு வருடமும் உலகின் முக்கியமான ஏதாவது ஒரு பெருநகரத்தில் தங்களுடைய நிகழ்வை சாம்சங் நடத்தும். இதுவரை லாஸ் வேகஸ், நியூயார்க், லண்டன், பெர்லின் மற்றும் பார்சிலோனா உள்ளிட்ட நகரங்களில் தங்கள் நிகழ்வை நடத்தியிருக்கிறது சாம்சங். இந்த ஆண்டு தங்கள் சொந்த நாடான தென் கொரியாவின் சியோலில் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது சாம்சங். தற்போது ஃபோல்டபிள் போன் செக்மண்டில் பல்வேறு நிறுவனங்கள் களமிறங்கியிருக்கும் நிலையில், தங்களது ப்ளாக்ஷிப் ஃபோல்டபிள் போன்களை இந்த வருட நிகழ்வில் சாம்சங் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Z ஃபோல்டு 5 மற்றும் Z ஃப்ளிப் 5 ஆகிய ஸ்மார்ட்போன்களை சாம்சங் வெளியிடலாம். இத்துடன் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்வாட்ச் மற்றும் டேப்லட்களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.