ஜனவரி 17-ல் வெளியாகவிருக்கும் சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்?
2024ம் ஆண்டிற்கான கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை, உலகளவில் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் ஜனவரி 17ம் தேதி நடத்தவிருப்பதாக இணையத்தில் தகவல் கசிந்திருக்கிறது. இந்திய நேரப்படி ஜனவரி 17ம் தேதி இரவு 11.30 மணிக்குத் தொடங்கவிருக்கிறது நிகழ்வு. மேலும், இந்த நிகழ்விலேயே தங்களுடைய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸான S24 சீரிஸையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது சாம்சங். பல்வேறு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புசிய S24 சீரிஸின் கீழ், S24, S24+ மற்றும் S24 அல்ட்ரா ஆகிய மூன்று வேரியன்ட் ஸ்மார்ட்போன்களை வெளியிடவிருக்கிறது சாம்சங்.
சாம்சங்கின் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ்:
சாம்சங்கின் இந்த ஃப்ளாக்ஷிப் S24 சீரிஸிலேயே, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய புதிய கேலக்ஸி AI வசதியையும் அறிமுகப்படுத்தவிருக்கிறது சாம்சங் நிறுவனம். ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டு வெளியாகவிருக்கும் புதிய S24 சீரிஸில், குவால்காமின் ஃப்ளாக்ஷிப் ப்ராசஸரான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அடிப்படை மாடலான S24-ல் மட்டும் எக்ஸினோஸ் 2400 ப்ராசஸர் பயன்படுத்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, ஆப்பிளைப் போல S24 சீரிஸின் டாப் மாடலான அல்ட்ராவில், அலுமினியம் பிரேமுக்குப் பதிலாக டைட்டானியம் பிரேமைப் சாம்சங் பயன்படுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.