டிசம்பர் 26-ல் இந்தியாவில் இரண்டு புதிய 5G ஸ்மார்ட்போன்களை வெளியிடும் சாம்சங்
தங்களுடைய புதிய 5G ஸ்மார்ட்போன்களான A15 மற்றும் A25 ஸ்மார்ட்போன்களை அடுத்த வாரம் சாம்சங் இந்தியாவில் வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. முன்பே வியட்நாமில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த இரண்டு மாடல்களையும், வரும் டிசம்பர் 26ம் தேதியன்று இந்தியாவில் சாம்சங் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலுமே 6.5 இன்ச் Super AMOELD திரையையே பயன்படுத்தியிருக்கிறது சாம்சங். பக்கவாட்டு ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்களைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன்களானது, புதிய ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டு வெளியாகவிருக்கின்றன. மேலும், இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய, 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் A15 மற்றும் A25: வசதிகள்
புதிய A15 5G மாடலில் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ ப்ராசரும், A25 5G மாடலில் சாம்சங்கின் சொந்த எக்ஸினோஸ் 1280 சிப்செட்டும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. A25 மாடலில், 50MP முதன்மை கேமரா, கூடுதலாக 8MP மற்றும் 2MP சென்சார்களுடன் கூடிய ட்ரிபிள் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், A15 மாடலிலும் 50MP முதன்மைக் கேமரா கொடுக்கப்பட்டிருக்கம் நிலையில், கூடுதலாக 5MP மற்றும் 2MP சென்சார்கள் கொண்ட ட்ரிபிள் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. சாம்சங்கின் இந்த இரண்டு 5G ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் ரூ.25,000 விலைக்குள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.