சந்தாதாரர்கள் குறைந்தால் என்ன? உலகளாவிய மொபைல் டேட்டா டிராஃபிக்கில் ஜியோ தான் நம்பர் 1
ரிலையன்ஸ் ஜியோ உலகளாவிய தொலைத்தொடர்பு சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தொடர்ந்து மூன்றாவது காலாண்டில் மொபைல் டேட்டா டிராஃபிக்கில் அதன் முதல் இடத்தைப் பராமரித்து வருகிறது என்று சர்வதேச கன்சல்டன்சி டிஎஃபீஷியன்ட் தெரிவித்துள்ளது. ஜியோவின் மொபைல் டேட்டா டிராஃபிக் கடந்த ஆண்டின் இதேகாலத்துடன் ஒப்பிடும்போது 24% அதிகரித்துள்ளது. இது சீனா மொபைல் போன்ற முக்கிய உலகளாவிய நிறுவனங்களில் சுமார் 2% மட்டுமே அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வளர்ச்சி இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் ஜியோவின் தலைமையை உறுதிப்படுத்துகிறது. இருப்பினும், ஜூலை மாதத்தில் மொபைல் திட்டங்களின் விலை உயர்வைத் தொடர்ந்து, கடந்த மூன்று மாதங்களில் ஜியோவின் சந்தாதாரர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
சந்தாதாரர்கள் எண்ணிக்கை
ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனமானது ஏறக்குறைய 11 மில்லியன் பயனர்களை இந்த காலத்தில் இழந்தது. அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 489.7 மில்லியனிலிருந்து ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 478.8 மில்லியனாகக் குறைந்தது. இந்த சரிவு இருந்தபோதிலும், ஜியோ, சீனாவிற்கு வெளியே உலகின் மிகப்பெரிய 5ஜி ஆபரேட்டராக வளர்ந்து வருகிறது. சேவையை அறிமுகப்படுத்திய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 148 மில்லியன் 5ஜி பயனர்களை ஜியோ கொண்டுள்ளது. சராசரி ஜியோ பயனர் தற்போது மாதத்திற்கு 31 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்துகிறார். இது அதிக பயனர் ஈடுபாட்டை பிரதிபலிக்கிறது. டேட்டா பயன்பாட்டில் ஏற்பட்ட இந்த எழுச்சி, ஜியோவின் சராசரி வருவாயை உயர்த்தியுள்ளது. இது சமீபத்திய மாதங்களில் 18% அதிகரித்துள்ளது.
பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டுமே ஒரே நேரத்தில் விலை உயர்வை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து இரண்டு நிறுவனங்களில் இருந்தும் வாடிக்கையார்கள் பிஎஸ்என்எல்லுக்கு மாறத் தொடங்கினர். எனினும், இதில் ஜியோ நிறுவனமே அதிக வாடிக்கையாளர்களை இழந்தது. இந்நிலையில், இந்த வாடிக்கையாளர்களில் பெரும்பாலோனோர் பிஎஸ்என்எல்லுக்கு மாறியதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களில் பிஎஸ்என்எல் 5.5 மில்லியன் புதிய பயனர்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் தனது இருப்பை பலப்படுத்தி வரும் பிஎஸ்என்எல்லும் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளில் கால் பதிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.