அக்டோபரில் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்னாப்டிராகன் ப்ராசஸர்களை வெளியிடும் குவால்காம்
அடுத்த மாதம் ஹவாயில் நடைபெறவிருக்கும் தங்களுடைய 'ஸ்னாப்டிராகன் சமிட்' நிகழ்வுக்காக தயாராகி வருகிறது குவால்காம் நிறுவனம். அக்டோபர் 24 முதல் 26ம் தேதி வரை நடைபெறுகிறது ஸ்னாப்டிராகன் சமிட் நிகழ்வு. இந்த நிகழ்வில் தங்களுடைய புதிய சிப்பை அறிமுகப்படுத்தவிருக்கிறது குவால்காம். தற்போது, உலகளவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மீடியாடெக் மற்றும் குவால்காம் நிறுவனங்களின் சிப்களே இடம்பெற்றிருக்கின்றன. தற்போது அந்நிறுவனத்தின் ஃப்ளாக்ஷிப் சிப்பாக, முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களின் ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் இடம்பிடித்திருக்கிறது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸர். அதனைத் தொடர்ந்து, 'ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3' ப்ராசஸரை இந்த அக்டோபர் மாத ஸ்னாப்டிராகன் சமிட் நிகழ்வில் வெளியிடவிருக்கிறது குவால்காம்.
குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3:
ஜென் 2வைப் போலவே, ஜென் 3 ப்ராசஸரையும் இரண்டு வேரியன்ட்களாக வெளியிடவிருக்கிறது குவால்காம். ஆனால், ஜென் 2வைப் போல தனித்தனியாக இல்லாமல் ஒரே நிகழ்வில் இரண்டு வேரின்ட்களையும் வெளியிடவிருக்கிறது குவால்காம். ஜென் 3யின் ஒரு வேரியன்ட்டானது 4nm ப்ராசஸ் நோடைக் கொண்டிருக்கவிருக்கிறது. மற்றொரு ஜென் 3 வேரியன்டானது 3nm ப்ராசஸ் நோடைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஆப்பிள் மட்டும் 3nm சிப்களை உருவாக்கி தங்களுடைய ஐபோன்களில் பயன்படுத்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது குவால்காமும், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான 3nm சிப்பை உருவாக்கியிருக்கிறது. தற்போதைய ஜென் 2 சிப்செட்டின் அப்டேட்டட் வெர்ஷனாக, புதிய ஃப்ளாக்ஷிப்பாக அடுத்த மாதம் வெளியாகவிருக்கின்றன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ப்ராசஸர்கள்.