இந்தியா போஸ்ட் பெயரில் எஸ்எம்எஸ்ஸா? எச்சரிக்கையாக இருங்கள்; PIB அலெர்ட்
மத்திய அரசின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) சமீபத்தில் இந்தியா போஸ்ட் பெயரில் மோசடி எஸ்எம்எஸ்கள் அதிகமாக வருவதாக எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த மோசடி எஸ்எம்எஸ்களில், மக்களை ஏமாற்றும் நோக்கில், அவர்கள் உடனடியாக தங்கள் பான் கார்டு விவரங்களை புதுப்பிக்க வேண்டும், இல்லையெனில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் கணக்குகள் முடக்கப்படும் என்று உள்ளது. இதனை நம்பி அவர்கள் சொல்வதைச் செய்தால், தங்கள் வங்கியில் உள்ள பணத்தை இழக்க நேரிடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கும்படி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக PIB எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த எஸ்எம்எஸ் செய்திகள் முற்றிலும் போலியாகும் என உறுதிப்படுத்தியது.
PIB உண்மை சரிபார்ப்பு குழுவின் எக்ஸ் பதிவு
எஸ்எம்எஸ் மோசடிகளில் சிக்காமல் இருக்கும் வழிகள்
இதுபோன்ற எஸ்எம்எஸ் மோசடிகளில் சிக்காமல் இருக்க, பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்:- எச்சரிக்கையாக இருங்கள்: நீங்கள் எதிர்பாராதவாறு பெறும் செய்திகளை எப்போதும் சந்தேகத்துடன் அணுகுங்கள். இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம்: சந்தேகத்துக்கிடமான செய்திகளில் உள்ள இணைய இணைப்புகளை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்ய வேண்டாம். அதிகாரப்பூர்வமாகச் சரிபார்க்கவும்: செய்தி உண்மையா என்பதை உறுதிசெய்ய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது தொலைபேசி மூலம் உறுதிப்படுத்தவும். தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம்: எஸ்எம்எஸ் மூலம் எந்தவிதமான நிதி தகவல்களையும் பகிர வேண்டாம். சந்தேகமான செய்திகள் வந்தால் புகாரளிக்கவும்: இத்தகைய எஸ்எம்எஸ்களை உங்கள் மொபைல் சேவை வழங்குநருக்கும், தகுந்த அதிகாரிகளுக்கும் தெரிவிக்கவும். உங்கள் மொபைலைப் புதுப்பிக்கவும்: மொபைலை அடிக்கடி புதுப்பித்து பாதுகாப்பாக வைத்திருங்கள்.