யூடியூபின் பெயரில் மின்னஞ்சலில் மோசடி.. பயனர்களே உஷார்!
உலகில் 2 பில்லியனுக்கும் அதிகமான இணையப் பயனர்கள் யூடியூபைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், யூடியூபின் பெயரில் புதிய ஆன்லைன் மோசடி ஒன்று அரங்கேறி வருவதாக எச்சரித்திருக்கிறது கூகுள். யூடியூபின் பெயரில் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு மோசடி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. பிரச்சினை என்னென்னறால், இவை மோசடி மின்னஞ்சல் தான் என கண்டறிய முடியாத அளவிற்கு உண்மைத்தன்மையுடன் இருக்கின்றன இந்த மின்னஞ்சல்கள். மேலும், அவை யூடியூபின் மின்னஞ்சல் முகவரியின் பெயரில் இருந்தே அனுப்பப்படுவது தான் இந்த மோசடியை மிகவும் அபாயகரமாக மாற்றுகிறது. தற்போது நிறைய பயனர்கள் சிறிய அளவிலும் கூட யூடியூப் சேனல்களை நடத்தி வருகிறார்கள். அவர்கள் தான் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சலில் "யூடியூபின் விதிமுறை மற்றும் கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மாற்றங்கள் குறித்த ஆவணம் ஒன்றை கீழே இருக்கும் லிங்க்கைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த ஆவணத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களைப் படித்து 7 நாட்களுக்குள் பதிலளிக்கவும்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த லிங்க்கை கிளிக் செய்து உள்ளே செல்பவர்கள் மோசடிக்கு ஆளாகிறார்கள். இது போன்ற மின்னஞ்சல் வந்தாலும், அது யூடியூபில் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் மின்னஞ்சலா என ஒன்றுக்கு இரண்டு முறை சோதனை செய்யுங்கள். மேலும், இது போன்ற மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் லிங்க்குகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரித்திருக்கிறது அந்நிறுவனம்.