LOADING...
வினாடிக்கு 3.1 குவாட்ரில்லியன் கணக்கீடு! ஐஐடி மெட்ராஸில் மிரட்டும் பரம்சக்தி சூப்பர் கம்ப்யூட்டர்; இந்தியா அதிரடி
ஐஐடி மெட்ராஸில் பரம்சக்தி சூப்பர் கம்ப்யூட்டர் வசதி தொடக்கம்

வினாடிக்கு 3.1 குவாட்ரில்லியன் கணக்கீடு! ஐஐடி மெட்ராஸில் மிரட்டும் பரம்சக்தி சூப்பர் கம்ப்யூட்டர்; இந்தியா அதிரடி

எழுதியவர் Sekar Chinnappan
Jan 08, 2026
07:10 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் தொழில்நுட்பத் திறனை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில், சென்னை ஐஐடியில் பரம் சக்தி என்ற அடுத்த தலைமுறை சூப்பர் கம்ப்யூட்டிங் வசதியை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. வியாழக்கிழமை (ஜனவரி 8) அன்று நடைபெற்ற இந்த விழாவில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இந்த அதிநவீன வசதியைத் தொடங்கி வைத்தார். இது ஆத்மநிர்பர் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டுத் தயாரிப்பு

தொழில்நுட்பத் திறன் மற்றும் உள்நாட்டுத் தயாரிப்பு

பரம் சக்தி சூப்பர் கம்ப்யூட்டர் 3.1 பெட்டாபிளாப்ஸ் வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது. அதாவது, இது ஒரு வினாடிக்கு 3.1 குவாட்ரில்லியன் கணக்கீடுகளைச் செய்யும் வலிமை வாய்ந்தது. சி-டாக் நிறுவனத்தின் ருத்ரா தொடர் சர்வர்களைக் கொண்டு இது கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஆல்மாலினக்ஸ் போன்ற ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்கள் மற்றும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மென்பொருள் தொகுப்புகளைப் பயன்படுத்தி இயங்குகிறது. இந்த வசதி இந்தியக் கல்வி நிறுவனங்களில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த கணினி அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஊக்கம்

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்குக் கிடைக்கும் ஊக்கம்

இந்த சூப்பர் கம்ப்யூட்டர் வசதி விண்வெளி பொறியியல், காலநிலை ஆய்வு, மருந்து கண்டுபிடிப்பு மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளில் சிக்கலான அறிவியல் சவால்களைத் தீர்க்கப் பெரிதும் உதவும். இது ஏற்கனவே 2025 மே மாதம் முதல் சோதனை அடிப்படையில் பயன்பாட்டில் உள்ள நிலையில், 80 சதவீதத்திற்கும் அதிகமான பயன்பாட்டை எட்டியுள்ளது. இதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகாலம் செய்ய வேண்டிய சோதனைகளை மிகக் குறுகிய காலத்தில் துல்லியமாகச் செய்து முடிக்க முடியும். இது இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புச் சூழலை உலக அளவில் வலுப்படுத்தும்.

Advertisement

எதிர்காலம்

தற்சார்பு இந்தியா மற்றும் எதிர்காலத் திட்டங்கள்

தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷன் கீழ் இதுவரை இந்தியா முழுவதும் 37 சூப்பர் கம்ப்யூட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. பெங்களூருவில் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர் அமைப்பை உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. பரம் சக்தி போன்ற உள்நாட்டுத் தயாரிப்புகள் வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, இந்தியாவை உலகளாவிய தொழில்நுட்ப மையமாக மாற்றும் நோக்கில் செயல்படுத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் எக்ஸாஸ்கேல் அளவிலான கணினித் திறனை அடைவதே இந்தியாவின் அடுத்த இலக்காக உள்ளது என்று இந்தத் தொடக்க விழாவில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement