புதிய மேம்படுத்தப்பட்ட 'GPT-4 டர்போ' AI சாட்பாட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஓபன்ஏஐ
உலகளவில் முன்னணி செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களுள் ஒன்றாக பயன்படுத்தப்பட்டு வரும் சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனமானது, முதல் முறையாக டெவலப்பர்கள் மாநாட்டை நேற்று (நவம்பர் 6) நடத்தியிருக்கிறது. இந்த டெவலப்பர்கள் மாநாட்டில், தங்களுடைய புதிய AI தொழில்நுட்பங்கள், பயனாளர்களுக்கான புதிய AI கருவிகள் மற்றும் தங்களுடைய புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது ஓபன் ஏஐ. இந்த மாநாட்டின் முக்கியமான அம்சமே ஓபன்ஏஐ நிறுவனத்தின் புதிய 'ஜிபிடி-4 டர்போ' (GPT-4 Turbo) சாட்பாட் மாடல் தான். தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஜிபிடி-4 சாட்பாட் மாடலின் அப்டேட்டட் வெர்ஷனாக இந்த ஜிபிடி-4 டர்போ மாடலை வெளியிட்டிருக்கிறது ஓபன்ஏஐ.
ஓபன் ஏஐயின் புதிய 'ஜிபிடி-4 டர்போ' சாட்பாட்:
முந்தைய ஜிபிடி-4ஐ விட அதிக செயல்திறனைக் கொண்டும், குறைவான செலவில் பயன்படுத்தும் வகையிலும் புதிய ஜிபிடி-4 டர்போவை வடிவமைத்திருக்கிறது ஓபன்ஏஐ. மேலும், புதிய ஜிபிடி-4 டர்போவை இரண்டு வகையில் உருவாக்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். ஒன்று, எழுத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் வகையிலான மாடல், மற்றொன்று புகைப்படம் மற்றும் எழுத்து இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கு வகையிலான ஜிபிடி-4 டர்போ. மேலும், இந்த புதிய ஜிபிடி-4 டர்போவைப் பயன்படுத்துவதற்கான விலைப்பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். அதன்படி, கேள்விகளைக் கேட்பதற்கு 1000 வார்த்தைகள் வரையிலான பயன்பாட்டிற்கு 0.01 டாலர்களும் (இந்திய மதிப்பில் 83 பைசா), 1000 வார்த்தைகள் வரை ஜிபிடியிடம் இருந்து பதிலாகப் பெறுவதற்கு 0.03 டாலர்களும் (இந்திய மதிப்பில் 2.50 ரூபாய்) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
ஜிபிடி-4ஐ விட மேம்பட்ட ஜிபிடி-4 டர்போ:
ஜிபிடி-4 டர்போ மாடலின் தகவல் தளத்தை அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது ஓபன்ஏஐ. ஜிபிடி-4 சாட்பாட் மாடலானது, செப்டம்பர் 2021 வரையிலான தகவல்களை மட்டுமே கொண்டிருந்த நிலையில், புதிய ஜிபிடி-4 டர்போவுக்கு ஏப்ரல் 2023 வரையிலான தகவல் தளத்தை அளித்திருக்கிறது அந்நிறுவனம். இதனால் சமீபத்திய நிகழ்வுகள் குறித்த கேள்விகளுக்கும் புதிய சாட்பாட் மாடலால் துல்லியமான தகவல்களுடன் பதில்களை அளிக்க முடியும் எனத் தெரிவித்திருக்கிறது ஓபன்ஏஐ. ஜிபிடி-4 டர்போவின் அறிமுகத்தைத் தொடர்ந்து, ஜிபிடி-4 மாடலுக்கான விலையில் மாற்றம் செய்திருக்கிறது ஓபன்ஏஐ. அதாவது, ஜிபிடி-4 டர்போவுக்கு மேற்கூறப்பட்ட அதே விலையில் இருமடங்கு ஜிபிடி-4 பயன்பாட்டை அளிப்பதாக அறிவித்திருக்கிறது ஓபன்ஏஐ.