ஓபன்ஏஐ அதிரடி: 2026 இறுதிக்குள் ஊழியர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்க திட்டம்
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, தனது நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப் பிரம்மாண்டமான விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. தற்போது 4,500 ஊழியர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், வரும் 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 8,000 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
வேலைவாய்ப்பு
எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்பு?
ஓபன்ஏஐ தனது புதிய பணியாளர்களைப் பெரும்பாலும் தயாரிப்பு மேம்பாடு, பொறியியல், ஆராய்ச்சி, விற்பனை ஆகிய முக்கியத் துறைகளில் பணியமர்த்த உள்ளது. குறிப்பாக, "Technical Ambassadorship" எனப்படும் தொழில்நுட்பத் தூதுவர் பணிகளுக்காக வல்லுநர்களைத் தேடி வருகிறது. இவர்கள் மற்ற வணிக நிறுவனங்கள் ஓபன்ஏஐ கருவிகளைச் சிறப்பாகப் பயன்படுத்த வழிகாட்டுவார்கள். கடந்த ஆண்டு டிசம்பரில், கூகுளின் ஜெமினி 3 வருகையைத் தொடர்ந்து, ஓபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் நிறுவனத்திற்குள் 'கோட் ரெட்' எச்சரிக்கை விடுத்தார். கூகுளுக்குப் போட்டியாகத் தங்களின் ஏஐ தொழில்நுட்பத்தை விரைவுபடுத்த, முக்கியமில்லாத திட்டங்களை நிறுத்திவிட்டு, அனைத்துக் குழுக்களையும் முதன்மைத் திட்டங்களில் கவனம் செலுத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.
நிதி
840 பில்லியன் டாலர் மதிப்பு
சமீபத்திய நிதி திரட்டலில், சாஃப்ட்பேங்க் மற்றும் பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து 110 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளன. இதன் மூலம் ஓபன்ஏஐ நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு 840 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஏஐ துறையில் தங்களின் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், புதிய கண்டுபிடிப்புகளை வேகமாக அறிமுகப்படுத்தவும் இந்த ஆள்சேர்ப்புப் படலம் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.