AI தொழில்நுட்பங்களுக்குக் கட்டுப்பாடு.. என்ன சொல்கிறார் OpenAI நிறுவனத்தின் CEO!
சாட்ஜிபிடியின் வரவைத் தொடர்ந்து ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. ஓபன்ஏஐ என்ற ஒரு நிறுவனம் மட்டுமல்ல, கூகுள் மைக்ரோசாஃப்ட் போன்ற பெருநிறுவனங்களும், ஏனைய குறு நிறுவனங்களும் தற்போது AI-யின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு வருகின்றனர். AI தொழில்நுட்பங்கள் மிக வேகமாக வளர்ந்துவரும் சூழ்நிலையில், அவற்றுக்கு கடிவாளம் போட வேண்டியது மிகவும் முக்கியம். இந்தக் கருத்தையே காங்கிரஸின் முன்பு ஆஜரான போது தெரிவித்திருந்தார் ஓபன்ஏஐயினி சிஇஓ சாம் ஆல்ட்மேன். தற்போது அதே கருத்தையே தங்கள் நிறுவனத்தின் வலைப்பூவில் வெளியிட்டிருக்கும் பதிவிலும் வலியுறுத்தியிருக்கிறார். இன்றைய AI தொழில்நுட்பங்கள் நிச்சயம் கட்டுப்படுத்தப்பட வேண்டியவைதான். ஆனால், நாளை உருவாகவிருக்கும் அதிநவீன AI தொழில்நுட்பங்களை இதனைவிட பலமடங்கு திறனைக் கொண்டிருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.
புதிய கட்டுப்பாட்டு அமைப்பு:
தற்போது இருக்கும் AI தொழில்நுட்பங்கள் மற்றும் நாளை உருவாகவிருக்கும் அதிநவீன AI தொழில்நுட்பங்களை கட்டுப்பாட்டில் வைக்க AI நிறுவனங்களும், அனைத்து நாட்டு அரசுகளும் சேர்ந்து முயற்சியை முன்னெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார் அவர். அணுஆற்றல் சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்க அனைத்து நாடுகளும் இணைந்த அமைப்பாக செயல்பட்டு வரும் IAEA போன்ற அமைப்பை AI தொழில்நுட்பங்களை கட்டுப்படுத்தவும் உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ஆல்ட்மேன். அரசுகள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமில்லாமல் அதிநவீன் AI தொழில்நுட்பங்கள் சார்ந்த விஷயங்களில் பொதுப்பயனர்களின் கருத்துக்களுக்கும் இடமளிக்க வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டிருக்கும் ஆல்ட்மேன், அதனை எந்த வகையில் சாத்தியப்படுத்துவது என்பது குறித்து ஓபன்ஏஐ நிறுவனத்தின் வலைப்பூவில் குறிப்பிடவில்லை.