மீண்டும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வாக சாம் ஆல்ட்மேனை நியமிக்க பரிசீலனை?
தங்களுடனான தகவல் தொடர்பில் சாம் ஆல்ட்மேன் வெளிப்படையாக இல்லை எனக் கூறி நேற்று அவரை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து நீக்கியது ஓபன்ஏஐ நிறுவனத்தின் இயக்குநர் குழு. செயற்கை நுண்ணறிவுத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தி வரும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டது சிலிக்கான் வேலி வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் அவரை ஓபன்ஏஐ நிறுவத்தின் சிஇஓவாக நியமிக்க பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. சாம் ஆல்ட்மேனின் நீக்கத்தைத் தொடர்ந்து ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைவரான கிரெக் ப்ராக்மேன் உட்பட அந்நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் அந்நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
மீண்டும் ஓபன்ஏஐ-யின் சிஇஓவாக சாம் ஆல்ட்மேன்?
மேலும், ஓபன்ஏஐ நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய ஊழியர்கள் சிலரும் அந்நிறுவனத்திலிருந்து விலகி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த திடீர் திருப்பங்களைத் தொடர்ந்தே சாம் ஆல்ட்மேனை மீண்டும் சிஇஓவாக நியமிக்க பரிசீலனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து விலகிய சாம் ஆல்ட்மேன், தன நிறுவனம் ஒன்றைத் தொடங்க முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து விலகிய அனைவரும் ஆல்ட்மேனின் புதிய நிறுவனத்தில் இணையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓவான சத்யா நாதெல்லாவும், சாம் ஆல்ட்மேனின் எந்த விதமான பாதையைத் தேர்ந்தெடுத்தாலும், அதற்குத் தான் உறுதுணையாக இருப்பதாகத் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.