இந்தியாவில் வெளியானது பட்ஜெட் விலையிலான புதிய 'ஒன்பிளஸ் பேடு கோ' டேப்லட்
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தாங்கள் வெளியிட்ட விலையுயர்ந்த 'ஒன்பிளஸ் பேடு'க்கு மாற்றாக, பட்ஜெட் விலையிலான புதிய 'ஒன்பிள்ஸ் பேடு கோ' டேப்லட்டை வெளியிட்டிருக்கிறது ஒன்பிளஸ் நிறுவனம். சாதாரண தினசரி நடவடிக்கைள் மற்றும் பிற உள்ளடக்கப் பயன்பாடுகளுக்கான தொடக்க நிலை டேப்லட்டை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை மையப்படுத்தி இந்தப் புதிய டேப்லட்டை வெளியிட்டிருக்கிறது ஒன்பிளஸ். இந்த ஒன்பிளஸ் பேடு கோவில், 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 11.35 இன்ச் LCD டிஸ்பிளே, டால்பி விஷன், HDR10+ உள்ளிட்ட வசதிகளையும், 8MP முன்பக்க மற்றும் பின்பக்க கேமராக்களையும் கொடுத்திருக்கிறது ஒன்பிளஸ்.
ஒன்பிளஸ் பேடு கோ: ப்ராசஸர் மற்றும் விலை
இந்தப் புதிய ஒன்பிளஸ் பேடு கோவில் ஹீலியோ G99 ப்ராசஸரையும் மலி-G57 MP2 ஜிபியுவையும் கொடுத்திருக்கிறது ஒன்பிளஸ். மேலும், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்ட 8000mAh பேட்டரியையும் இந்த டேப்லட்டில் கொடுத்திருக்கிறது அந்நிறுவனம். ஆண்ட்ராய்டு 13ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன் 13.2 இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஒன்பிளஸ் பேடு கோவில், வை-பை 5 மற்றும் ப்ளூடூத் 5.2 ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மாஸ் ஆடியோ வசதிகள் இந்த பேடு கோவில் அளிக்கப்பட்டிருக்கின்ரன. LTE வசதி மட்டும் கொண்ட பேடு கோவின் 8GB/128GB வேரியன்டானது ரூ.19,999 விலையிலும், வைபை மற்றும் LTE கொண்ட வேரியன்டானது ரூ.21,999 விலையிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. மற்றொரு 8GB/256GB வேரியன்டாது ரூ.23,999 விலையில் வெளியாகியிருக்கிறது.