செயற்கை நுண்ணறிவு செயலியான, சாட் ஜிபிடி க்கு தடை விதித்துள்ளது நியூயார்க் நகர பள்ளிகள்
நியூ யார்க் நகரின் பொதுப் பள்ளிகள், செயற்கை நுண்ணறிவு செயலியான சாட் ஜிபிடி-க்கு தடை விதித்துள்ளது. மாணவர்களின் கற்றலில் உருவாகும் எதிர்மறையான தாக்கங்கள் மற்றும் செயலியின் உள்ளடக்கத்தின், பாதுகாப்பு மற்றும் துல்லியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கலாம். NYC பொதுப்பள்ளிகள் சங்கத்தின் இந்த முடிவு, சாட்ஜிபிடியின் வளர்ச்சியில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த AI கருவியால், கேட்கப்படும் கேள்விகளுக்கு விரைவான, எளிதான பதில்களை வழங்க முடியும் என்றாலும், இது சிந்தினைத் திறன் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை உருவாக்காது. கல்வி மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெற, இவை அவசியம் என்று நியூயார்க் பொதுப் பள்ளிகளின் செய்தித் தொடர்பாளர் ஜென்னா லைல் கூறினார்.
சாட் ஜிபிடிக்கு தடை என்பது எத்தகைய விளைவை ஏற்படுத்தும்
இருப்பினும், இப்போது விதித்திருப்பது ஒரு பெரிய தடை அல்ல. பள்ளிகளில் யூடியூப் போன்ற பொழுதுபோக்கு தளங்களைத் தடுக்க பயன்படுத்தும் அதே கட்டுப்பாடுகளைத் தான் செயல்படுத்தியுள்ளனர். சக்திவாய்ந்த AI கருவிகளில் ஒன்றாக கருதப்படும் இந்த சாட்ஜிபிடி, பல வியப்பூட்டும் திறமைகளை உட்கொண்டுள்ளது. சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ, இந்த எதிர்மறை விமர்சனங்களை கருத்தில் கொண்டு, அதன் செயலியை மேலும் மேம்படுத்துவதாக கூறியுள்ளது. ChatGPT ஆல் உருவாக்கப்பட்ட உரையைக் கண்டறிய, மக்களுக்கு உதவும் வகையில் "தணிப்புகளை" உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது. நிஜ உலக பயன்பாட்டிலிருந்து கற்றுக்கொள்வதற்கான, ஆராய்ச்சி முன்னோட்டமாக ChatGPT ஐ செய்துள்ளோம். இது திறமையான, பாதுகாப்பான AI அமைப்புகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் முக்கிய அங்கமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று நிறுவனம் தெரிவித்தது.