பயன்பாட்டில் இல்லாத யுபிஐ ஐடிக்களை முடக்கவிருக்கும் NPCI
டிசம்பர் 31ம் தேதிக்குள் பயன்பாட்டில் இல்லாத யுபிஐ ஐடிக்களை (UPI ID) முடக்க வேண்டும் என யுபிஐ வசதி மூலம் கட்டண சேவை வழங்கி வரும் போன்பே, கூகுள் பே உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது NPCI (National Payments Corporation of India) அமைப்பு. பயனாளர்கள் தங்களது வங்கித் தகவல்களை அப்டேட் செய்யாமல், மொபைல் எண்களை மாற்றும் போது, தேவையில்லாத அல்லது தவறுதலான பணப்பரிமாற்றங்கள் நிகழாமல் தடுக்கவே இந்த முடிவை செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது NPCI அமைப்பு. செயலிழக்கம் செய்யப்பட்ட மொபைல் எண்களை, செயலிழக்கம் செய்யப்பட்டதில் இருந்து 90 நாட்களுக்குப் பிறகு வேறு வாடிக்கையாளர்களுக்கு மொபைல் நிறுவனங்கள் வழங்கலாம் என TRAI அமைப்பின் மொபைல் எண் பயன்பாடு குறித்த அறிவிப்பு குறிப்பிடத்தக்கது.
நம்முடைய யுபிஐ ஐடி முடங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
நாம் தொடர்ந்து பயன்படுத்தும் அல்லது அவ்வப்போது கூட பயன்படுத்தும் யுபிஐ ஐடிக்கள் எதுவும் முடக்கப்படாது. தொடர்ந்து ஒரு ஆண்டுக்கும் மேல் பயன்பாட்டில் இல்லாத யுபிஐ ஐடிக்களை முடக்க மட்டுமே ஆணை பிறப்பித்திருக்கிறது NPCI. தொடர்ந்து பயன்பாட்டில் இல்லாத யுபிஐ ஐடிக்களை முடக்குவதுடன், அது தொடர்பான மொபைல் எண்களையும் யுபிஐ பயன்பாட்டிலிரு்நது பதிவு நீக்கம் செய்யவிருக்கிறது NPCI. அப்படி முடக்கப்பட்ட யுபிஐ ஐடிக்கள் அல்லது பதிவு நீக்கம் செய்யப்பட்ட மொபைல் எண்களை மீண்டும் யுபிஐ பணப்பரிவர்த்தனைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றால், மீண்டும் அதனை முதலில் இருந்து ஒரு கட்டண சேவை மூலம் பதிவு செய்த பின்பு பயன்படுத்தத் தொடங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.