நத்திங் போன் (2)-வில் என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்போது வெளியீடு?
தங்களுடைய இரண்டாவது ஸ்மார்ட்போனான ஃப்ளாக்ஷிப் 'போன் (2)'வை வெளியிடத் தயாராகி வருகிறது நத்திங் நிறுவனம். ஜூலை 11-ம் தேதி தங்களுடைய இரண்டாவது ஸ்மார்ட்போனை வெளியிடவிருப்பதாக அந்நிறுவனத்தின் அறிவிப்பை ஃப்ளிப்கார்ட் தளத்தில் பார்க்க முடிகிறது. நத்திங் போனில் உள்ள தனிப்பட்ட அம்சம் அதன் ரியர் பேனலும், அதில் உள்ள கிளிப் லைட்டிங்கும் தான். ஃபிளிப்கார்ட் தளத்தில் காணப்படும் அறிவிப்பிலேயே அதன் ரியல் பேனலில் உள்ள கிளிப் லைட்டிங்கின் டிசைனை வெளிப்படுத்தியிருக்கிறது நத்திங். போன் (1)-ன் பின்பக்க லைட்டிங்கை கொஞ்சம் மறுவடிவம் செய்து போன் (2)-வில் பயன்படுத்தியிருக்கிறது நத்திங். இதைத் தவிர, நத்திங் நிறுவனம் வேறு என்ன மாற்றங்களை பின்பக்க பேனலில் செய்திருக்கிறது என்பதைக் காண வெளியீடு வரை நாம் காத்திருக்க வேண்டும்.
நத்திங் போன் (2): வசதிகள்
நத்திங் போன் (2)-வில் என்னென்ன வசதிகளைக் கொடுக்கவிருக்கிறார்கள் என இதற்கு முன்பு தான் கலந்து கொண்ட நேர்காணல்களிலேயே தெரிவித்திருக்கிறார் அந்நிறுவனத்தின் சிஇஓ கார்ல் பெய். தங்களின் புதிய ஸ்மார்ட்போனில் கடந்த ஆண்டு குவால்காம் வெளியிட்ட ஃப்ளாக்ஷிப் ப்ராசஸரான ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 ப்ராசஸரைப் பயன்படுத்தவிருக்கிறது நத்திங். 120Hz ரெப்ரஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் டிஸ்பிளேவுடன், தற்போதைய ஸ்மார்ட்போனை விட 200mAh கூடுதலாக 4,700mAh பேட்டரியைக் கொண்டிருக்கப் போகிறது போன் (2). போன் (1)-ஐ போலவே போன் (2)-வையும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யத் திட்டமிட்டிருக்கிறது நத்திங். மேலும், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைக் கொண்ட இந்த புதிய ஸ்மார்ட்போனை உற்பத்தி செய்யவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது நத்திங் நிறுவனம்.