பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக நத்திங் சேட்ஸ் செயலியானது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்
கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது நத்திங். இந்நிலையில், தங்களது ப்ளாக்ஷிப் நத்திங் போன் (2)-வுக்கான 'நத்திங் சேட்ஸ்' (Nothing Chats) என்ற புதிய ஆண்ட்ராய்டு செயலியை வெளியிட்டிருந்தது அந்நிறுவனம். ஆப்பிளின் ஐமெஸேஜ், ஆண்ட்ராய்டிற்கான RCS மற்றும் SMS ஆகிய பல்வேறு குறுஞ்செய்தித் சேவைகளை ஒரே இடத்தில் பயன்படுத்தும் வகையில் புதிய நத்திங் சேட்ஸ் செயலி வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த செயலியை சன்பேர்டு நிறுவனத்தின் உதவியுடன் நத்திங் அறிமுகப்படுத்தியிருந்தது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இந்த செயலியானது நேற்று முன்தினம் (நவம்பர் 17) முதல் பயன்பாட்டிற்கு வந்தது. ஒரே தளத்தில் அனைத்து சேவைகளையும் ஒன்றினைக்கும் என்றாலும், தற்போது நத்திங் சேட்ஸ் செயலியில் சில பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சசாட்டுகள் எழுந்து வருகின்றன.
நத்திங் சேட்ஸ் செயலி பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்:
texts.com தளமானது நத்திங் சேட்ஸ் செயலியில் எண்டு-டு-எண்டு என்கிரிப்ஷன் இல்லை. அந்த செயலியின் உதவியுடன் நாம் அனுப்பும் குறுஞ்செய்திகளை ஹேக்கர்களால் எளிதில் இடைமறித்துத் தகவல்களைப் பெற முடியும் எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தவிர, நத்திங் சேட்ஸ் செயலியின் மூலம் ஆப்பிள் ஐடியைக் கொண்டு உள்நுழையும் போது, நாம் உள்நுழையப் பயன்படுத்தும் தகவல்களையும் ஹேக்கர்களால் பெற முடியும் எனவும் கண்டறியப்பட்டது. இத்தகைய பாதுகாப்புக் குறைபாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, தங்களுடைய நத்திங் சேட்ஸ் செயலியை கூகுளின் பிளே ஸ்டோரில் இருந்து திரும்பப் பெற்றிருக்கிறது நத்திங். மேலும், இந்த செயலியை சோதனை முறையில் தான் அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. தற்போதைய குளறுபடிகளைத் தொடர்ந்து, நத்திங் சேட்ஸ் செயலியின் வெளியீட்டையும் காலவரையின்றி தள்ளிவைத்திருக்கிறது நத்திங்.