
குவால்காமின் புதிய 'ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3' சிப்செட்டைக் கொண்டு வெளியாகவிருக்கும் ஸ்மார்ட்போன்கள்
செய்தி முன்னோட்டம்
ஹவாயில் நடைபெற்ற ஸ்னாப்டிராகன் சம்மிட் நிகழ்வில் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் வகையிலான தங்களுடைய புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ஃப்ளாக்ஷிப் சிப்செட்டை அறிமுகப்படுத்தியது குவால்காம்.
முந்தைய சிப்பைவிட 30% கூடுதல CPU செயல்திறன், 25% மேம்பட்ட GPU செயல்திறன் மற்றும் 10% குறைவான ஆற்றலை செலவழிக்கும் வகையில் புதிய சிப்பை மேம்படுத்தியிருக்கிறது குவால்காம்.
ஒன்பிளஸ், ஐகூ மற்றும் சாம்சங் உள்ளிட்ட பல்வேறு நிறுனங்கள் குவால்காமின் இந்த ஃப்ளாக்ஷிப் சிப்செட்டைப் பயன்படுத்தி புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகின்றன.
சீனாவைச் சேர்ந்த ஐகூ நிறுவனம் இந்த சிப்செட்டைப் பயன்படுத்தி உருவாக்கப்படவிருக்கும் ஐகூ 12 ஸ்மார்ட்போனை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், வேறு எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் இந்தப் புதிய சிப்செட் பயன்படுத்தப்படவிருக்கிறது.
குவால்காம்
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டைக் கொண்டு வெளியாகவிருக்கும் ஸ்மார்ட்போன்கள்:
தங்களுடைய புதிய 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இந்தப் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்பைப் பயன்படுத்தவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஷாவ்மி. இந்தியாவிலும் விரைவில் இந்த ஸ்மார்ட்போனை வெளியிடவிருக்கிறது அந்நிறுவனம்.
தங்களுடைய அடுத்த ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனான 12 சீரிஸ் போன்களில் புதிய சிப்பைப் பயன்படுத்தவிருக்கிறது ஒன்பிளஸ். இதன் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகவிருக்கும் ஓப்போ ஃபைண்டு X7 ப்ரோ ப்ரீமியம் ஸ்மார்ட்போனில் இந்த சிப்பைப் பயன்படுத்தவிருக்கிறது ஓப்போ.
சாம்சங்கின் பிரபலமான மற்றும் ப்ரீமியமான S சீரிஸின் அடுத்த ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான S24 சீரிஸில் இந்தப் புதிய ப்ராசஸரைப் பயன்படுத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது சாம்சங்.
ஸ்மார்ட்போன்
புதிய சிப்பைப் பயன்படுத்தவிருக்கும் பிற ஸ்மார்ட்போன்கள்:
ரியல்மி நிறுவனமானது தங்களுடைய அடுத்த ஃப்ளாக்ஷிபான ரியல்மி GT5 ஸ்மார்ட்போனில் இந்தப் ப்ராசஸரைப் பயன்படுத்தவிருக்கிறது.
விவோ X100+ ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் குவால்காமின் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்பைப் பயன்படுத்தவிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
அசூஸ் நிறுவனமானது அடுத்த ஆண்டு வெளியிடவிருக்கும் தங்களுடைய ஸென்போன் 11 மற்றும் ROG போன் 8 ஆகிய இரண்டு ஃப்ளாக்ஷிப் போன்களில் இந்த சிப்பைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது.
மோட்டோரோலா மற்றும் சோனி ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய வருங்காலத் தயாரிப்புகளில் இந்தப் புதிய சிப்செட்டைப் பயன்படுத்தவிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றன.
சீனாவைச் சேர்ந்த மற்றொரு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஹானரும், குவால்காமின் புதிய சிப்செட்டை தங்களுடைய ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த வாய்ப்புகள் இருக்கிறது.