Page Loader
ப்ளக்இன் மூலம் சாட்ஜிபிடியில் ரியல் எஸ்டேட் சேவை வழங்கும் அமெரிக்க நிறுவனம்!
ப்ளக்இன் வசதியுடன் ரியல் எஸ்டேட் சேவை வழங்கும் சாட்ஜிபிடி

ப்ளக்இன் மூலம் சாட்ஜிபிடியில் ரியல் எஸ்டேட் சேவை வழங்கும் அமெரிக்க நிறுவனம்!

எழுதியவர் Prasanna Venkatesh
May 03, 2023
05:32 pm

செய்தி முன்னோட்டம்

சாட்ஜிபிடியில் கடந்த மார்ச் மாதம் பிளக்இன் வசதியை அறிமுகப்படுத்தியது ஓபன்ஏஐ நிறுவனம். சாட்ஜிபிடியின் பின்னடைவுகளுள் ஒன்றாகக் கருதப்படுவது 2021 செப்டம்பருக்குப் பின்னான தகவல்களை அதனால் வழங்க முடியாமல் இருப்பது. அந்தப் பிரச்சினையை பிளக்இன்களைக் கொண்டு சரி செய்ய முயற்சி செய்தது ஓபன்ஏஐ. பிளக்இன்களை மற்ற நிறுவனங்கள் பயன்படுத்துவதன் மூலம் நிகழ்நேர தகவல்களை சேகரித்து அதனைக் கொண்டு பயனர்களுக்குத் தேவையான தகவல்களை சாட்ஜிபிடியால் வழங்க முடியும். தற்போது சாட்ஜிபிடியில் தங்களுடைய பிளக்இன்னைப் பயன்படுத்தியிருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ரியல்-எஸ்டேட் நிறுவனமான ஸில்லோ (Zillow). இந்தப் பிளக்இன்னைப் பயன்படுத்துவதன் மூலம் தங்களுக்கு தேவையான வீட்டை சாட்ஜிபிடியிடம் சாட் செய்தே வாடிக்கையாளர்கள் கண்டறிய முடியும்.

சாட்ஜிபிடி

ஸில்லோ சாட்ஜிபிடி பிளக்இன்: 

இந்த பிளக்இன்னின் மூலம் ஸில்லோவின் தகவல்தளத்தை சாட்ஜிபிடியால் பயன்படுத்த முடியும். எனவே, பயனர்கள் கேட்கும் தகவல்களுக்கு ஏற்ப அதன் தகவல் தளத்தில் தேடி வாடிக்கையாளர்களுக்கான பதிலை அளிக்கிறது சாட்ஜிபிடி. உதாரணத்திற்கு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட விலைக்குள், இத்தனை படுக்கையறைகளுடன் வீடு வேண்டும் எனக் கேட்டால், ஸில்லோவின் தகவல் தளத்தில் தேடி பயனர்கள் கேட்ட குறிப்பிட்ட வகையான வீடுகளை மட்டும் அவர்களுக்குக் காட்டும். தற்போது அமெரிக்காவில் குறிப்பிட்ட பயனர்களுக்கும் மட்டுமே இந்த வசதியை அளித்திருக்கிறது அந்நிறுவனம். தற்போது தொடக்க நிலையிலேயே இருக்கிறது இந்த ப்ளக்கின் வசதி. இதனை மேம்படுத்துவதன் மூலம் வரும் நாட்களில் இதனால் இன்னும் சிறப்பாக செயல்படமுடியும் என அந்நிறுவனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.