புதிய கேமிங் தொடர்பான செயலியை வெளியிட்டிருக்கும் நெட்ஃபிலிக்ஸ்
நெட்ஃபிலிக்ஸ் சந்தாதாரர்கள் தங்களது தொலைக்காட்சிப் பெட்டியிலும் கேம்களை விளையாட உதவும் வகையில் 'நெட்ஃபிலிக்ஸ் கேம் கண்ட்ரோலர்' என்ற செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். இந்தச் செயலியின் மூலம் பயனர்கள் தங்களது ஐபோன்களையே கேம் கண்ட்ரோலாரகப் பயன்படுத்தி, நெட்ஃபிலிக்ஸ் வழங்கும் விளையாட்டுக்களை தொலைக்காட்சியில் விளையாட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வசதி எப்போது இருந்து செயல்பாட்டிற்கு வரும் என்பது குறித்த தகவல்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை. மேலும், இந்த புதிய வசதியானது தொடக்க நிலையில் இருப்பதால், ஐஓஎஸ் தளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறது. மொபைல் கேமிங்கைக் கடந்து, கிளவுடு கேமிங் சேவையை வழங்கத் திட்டமிட்டு வருவதாக ஏற்கனவே நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கும் நிலையில், தற்போது இந்த புதிய செயலி வெளியாகியிருக்கிறது.
நெட்ஃபிலிக்ஸின் திட்டம் என்ன?
2021-ல் தங்களது OTT சேவையுடன் இணைந்து, புதிய கேம்களையும் அறிமுகப்படுத்தத் தொடங்கியது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம். இந்த கேம்களை நெட்ஃபிலிக்ஸ் சந்தாதாரர்களுக்கு மட்டுமே என்றும் அறிவித்தது அந்நிறுவனம். தற்போது வரை 50-க்கும் மேற்பட்ட கேம்களை வெளியிட்டிருக்கும் நெட்ஃபிலிக்ஸ், விரைவில் கிளவுடு கேம்களையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது. எனினும், பிளேஸ்டேஷன் மற்றும் எக்ஸ்பாக்ஸ் உள்ளிட்ட சேவைகளுக்கு போட்டியாக தங்கள் சேவைகளை நினைக்கக் கூடாது என தெரிவித்திருக்கும் நெட்ஃபிலிக்ஸ் கேமிங்கின் துணைத்தலைவர் மைக் வெர்டூ, இந்த கேமிங் சேவையானது மதிப்புக்கூட்டு சேவை மட்டுமே என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார். இந்த ஆண்டு 40-க்கும் மேற்பட்ட புதிய கேம்களை அறிமுகப்படுத்தத் அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கும் நிலையில், 16 புதிய கேம்களை சொந்தமாகவும், 70-க்கும் மேற்பட்ட கேம்களை கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கி வருவதாகத் தெரிவித்திருக்கிறது.