NavIC செயலிழப்பு: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக் கொண்டதன் பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் சொந்த செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பான 'நேவிக்' (NavIC - Navigation with Indian Constellation), போதிய செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இயங்காததால் தற்போது தனித்து செயல்படும் திறனை இழந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், IRNSS-1F செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிந்த நிலையில், தற்போது IRNSS-1B, IRNSS-1I, NVS-01 ஆகிய மூன்று செயற்கைக்கோள்கள் மட்டுமே இயங்கி வருவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
முக்கியத்துவம்
'நேவிக்' இயங்க 4 செயற்கைக்கோள்கள் ஏன் தேவை?
விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்கள் மூலம் ஒருவரின் இருப்பிடத்தை துல்லியமாகக் கணக்கிட 'Trilateration' என்ற தொழில்நுட்பம் பயன்படுகிறது.
ஒருவரின் அட்சரேகை(Latitude), தீர்க்கரேகை(Longitude) மற்றும் உயரம்(Altitude) ஆகிய 3 நிலைகளைக் கண்டறிய 3 செயற்கைக்கோள்கள் தேவை.
வழிசெலுத்தல் செயற்கைக்கோள்களில் பல கோடிரூபாய் மதிப்பிலான அணு கடிகாரங்கள் இருக்கும். ஆனால், நம் ஸ்மார்ட்போன்களில் உள்ள சாதாரண கடிகாரங்களில் ஒரு வினாடியில் மில்லியனில் ஒரு பங்கு(1/1,000,000 second) காலதாமதம் ஏற்பட்டாலும், அது இருப்பிடத்தைக் கணக்கிடுவதில் சுமார் 300 மீட்டர் பிழையை ஏற்படுத்திவிடும்.
ஸ்மார்ட்போனில் உள்ள 4 தெரியாத காரணிகளை சரியாகக் கணக்கிட குறைந்தது 4 செயற்கைக்கோள்களின் சிக்னல் அவசியம்.
தற்போது 3 செயற்கைக்கோள்கள் மட்டுமே இயங்குவதால், நேவிக் அமைப்பால் தனித்து இருப்பிடத்தை கணக்கிட முடிவதில்லை.
இயக்கம்
கூகுள் மேப்ஸ் தொடர்ந்து இயங்குவது எப்படி?
ஸ்மார்ட்போன்களில் உள்ள கூகுள் மேப்ஸ் போன்ற செயலிகள் நேவிக் சிக்னலை மட்டும் நம்பியிருப்பதில்லை.
அமெரிக்காவின் GPS, ஐரோப்பாவின் Galileo, ரஷ்யாவின் GLONASS, மற்றும் சீனாவின் BeiDou ஆகிய பிற நாடுகளின் செயற்கைக்கோள் நெட்வொர்க்குகளின் இணைந்த சிக்னல்களை பயன்படுத்துவதால், நேவிக் செயலிழந்தாலும் கூகுள் மேப்ஸ் வழக்கம் போல தடங்கலின்றி இயங்குகிறது.
நடவடிக்கை
இஸ்ரோவின் அடுத்தகட்ட நடவடிக்கை
அடுத்த தலைமுறை செயற்கைக்கோளான NVS-03 விண்ணில் ஏவத் தயாராக உள்ளது.
இதனைத் தொடர்ந்து NVS-04 மற்றும் NVS-05 ஆகிய செயற்கைக்கோள்களின் தயாரிப்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த புதிய செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு, 'நேவிக்' சேவை மீண்டும் முழு வீச்சில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.