நிலவில் நீண்ட கால குடியிருப்புகள்.. நாசாவின் புதிய திட்டம்!
சந்திரயான் திட்டத்தின் மூலம் நிலவில் தண்ணீரின் இருப்பைக் கண்டறிந்த போதும் சரி, சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் நிலவின் தென்துருவப் பகுதியில் இந்திய தரையிறங்கிய போதும் சரி, இவற்றின் முக்கியத்துவமானது பின்னாளில் கட்டமைக்கப்படவிருக்கும் நிலவுக் கட்டமைப்புகளை முன்வைத்தே குறிப்பிடப்பட்டது. அமெரிக்காவும், சீனாவும் நிலவில் புதிய நீண்ட கால பயன்பாட்டுக் கட்டமைப்புகளை மேம்படுத்தத் திட்டமிட்டு வருகின்றன. அதற்கு நிலவில் மனிதர்கள் பயன்படுத்துவதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் இருப்பது அவசியம். அந்த அடிப்படை வசதிகள் நிலவில் இருப்பதை தற்போது மேற்கூறிய நாடுகள் உறுதி செய்து வருகின்றன. இந்நிலையில், நிலவுக்கு விண்வெளி வீரர்களை மட்டுமின்றி வசதியான வாடிக்கையாளர்களையும் அழைத்துச் செல்ல திட்டமிட்டு வருகிறது அமெரிக்க விண்வெளி அமைப்பு.
நிலவில் புதிய வீடுகள்:
நிலவில் இருக்கும் மணலைக் கொண்டே நிலவில் வீடுகளை புதிய கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன நாசாவும், அமெரிக்கவைச் சேர்ந்த நிறுவனமான ஐகானும் (ICON). இந்த ஐகான் நிறுவனமானது, ஏற்கனவே அமெரிக்காவின் டெக்சாஸ் மாகானத்தில் 3D பிரிண்டிங் முறையில் 48 மணி நேரத்தில் வீடுகளை கட்டமைத்து வருகிறது. இதே முறையையே நிலவில் கட்டமைக்கவிருக்கும் நீண்ட கால குடியிருப்புகளை உருவாக்கவும் பயன்படுத்தத் திட்டமிட்டு வருகிறது ஐகான். ஆனால், தற்போது பரிசோதனை முறையிலேயே இருக்கிறது இத்திட்டம். 2040ம் ஆண்டிற்குள் நிலவில் மேற்கூறிய முறையில் புதிய குடியிருப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியம் இருப்பததாகத் தெரிவித்துள்ளது நாசா. இந்தத் திட்டம் சாத்தியமானால் விண்வெளி சுற்றுலாவில், இனி நிலவுக்கும் சுற்றுலா சென்று வர முடியும்.