புறக்கோளில் நீராவி இருப்பைக் கண்டறிந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி!
செய்தி முன்னோட்டம்
புறக்கோள் ஒன்றில் நீராவி இருப்பதற்கான அறிகுறியைக் கண்டறிந்திருக்கிறது நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.
ஆனால், அது குறிப்பிட்ட புறக்கோளில் இருந்துதான் வெளிப்பட்டதா அல்லது அது சுற்றிவரும் நட்சத்திரத்தில் இருந்து வெளிப்பட்டதா என விஞ்ஞானிகளால் இன்னும் தெளிவாகக் கண்டறிய முடியவில்லை.
GJ 486 b எனப் பெயரிடப்பட்டிருக்கும் புறக்கோள் ஒன்று அதன் நட்சத்திரத்தை மிக அருகில் சுற்றிவந்து கொண்டிருக்கிறது. எனவே, அதில் வளிமண்டலம் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனக் கருதுகின்றனர்.
ஆனால், நீராவி இருப்பதற்கான அறிகுறி, அந்தப் புறக்கோளில் வளிமண்டலம் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் காட்டுவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
வாயுக்களால் ஆன புறக்கோள்களில் இதற்கு முன்னர் நீராவியின் இருப்பை கண்டறிந்துள்ளனர். ஆனால், பாறைகளால் ஆன புறக்கோளில் வளிமண்டலம் இருப்பது இதுவரை கண்டறியப்பட்டதில்லை.
விண்வெளி
புதிய மைல்கல்:
GJ 486 b புறக்கோளானது பூமியை விட 30% பெரியது. அது 6 முதல் 8 சூரிய நிறையுடைய சிறிய சிவப்பு நட்சத்திரத்தை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.
பாறைகளால் ஆன புறக்கோளில் இருந்து நீராவி இருப்பதற்கான அறிமுறி கண்டறியப்பட்டது. பாறைகளால் ஆன சூடான புறக்கோளின் வளிமண்டத்தில் நீராவி இருப்பது உறுதியானால், அது புறக்கோள் அறிவியலில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதன் மூல நட்சத்திரத்தில் இருந்து இந்த நீராவிக்கான அறிகுறி வெளிப்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
சூரியனில் இருக்கும் சன்ஸ்பாட்களைப் போலவே, அந்த நட்சத்திரத்தில் இருக்கும் ஸ்டார்ஸ்பாட்களில் இருந்து இந்த நீராவிக்கான அறிகுறி வெளிப்பட்டிருக்க வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.