நிலவில் விண்வெளி வீரர்களுக்கு புதிய ஆபத்து: தீர்வு சொல்பவர்களுக்கு $1,50,000 பரிசு வழங்கும் நாசா
செய்தி முன்னோட்டம்
நிலவின் மேற்பரப்பில் நடக்கும்போது விண்வெளி வீரர்கள் மீது ஆபத்தான நிலமின்சாரம் (Static Electricity) சேகரமாவதைத் தடுக்கும் பொறியியல் தீர்வுகளை கண்டறிய நாசா லூனார் கிரவுண்டிங் சேலஞ்ச் என்ற சர்வதேசப் போட்டியை அறிவித்துள்ளது. இந்த சவாலில் வெற்றி பெறும் சிறந்த தொழில்நுட்பத் திட்டங்களுக்கு $1,50,000 (சுமார் ₹1.26 கோடி) பரிசுத்தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2028-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள ஆர்டெமிஸ் திட்டங்களின் போது நிலவின் தென்பகுதியில் விண்வெளி வீரர்களைத் தரையிறக்க நாசா திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக இந்த போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்து
நிலவில் உருவாகும் மின்சார அச்சுறுத்தலும் ஆபத்துகளும்
நிலவின் மேற்பரப்பில் நடக்கும்போது ஏற்ப உராய்வு காரணமாகவும், விண்வெளியில் உள்ள பிளாஸ்மா கதிர்வீச்சினாலும் விண்வெளி வீரர்களின் ஆடைகளில் பெருமளவு மின்சாரம் சேகரமாகிறது.
குறிப்பாக நிலவின் நிரந்தர நிழல் பகுதிகளில் நடக்கும்போது எதிர்மறை மின்சாரம் பெருமளவில் உயர்ந்து விண்வெளி வீரர்கள் ஒரு "நடமாடும் உயர் மின்னழுத்த மின்தேக்கியாக" மாறும் அபாயம் உள்ளது.
வெளிச்சமான பகுதிக்கு விண்வெளி வீரர்கள் திரும்பி வந்து லேண்டர் அமைப்பைத் தொடும்போது, இரு வேறு மின்னழுத்த வேறுபாடு காரணமாக திடீர் மின்சாரப் பொறி உருவாகக் கூடும்.
இந்தத் திடீர் மின்சாரம் ஆடையின் அத்தியாவசிய அடுக்குகளைச் சேதப்படுத்துவதுடன், ஆடைக்குள்ளிருக்கும் ஆக்ஸிஜன் நிறைந்த சூழலில் தீப்பற்ற வைக்கலாம் அல்லது விண்வெளி வீரர்களுக்கு ஆபத்தான மின்அதிர்ச்சியை ஏற்படுத்தலாம் என நாசா எச்சரித்துள்ளது.
விதி
சவாலின் விதிகளும் பங்கேற்கும் முறையும்
இந்த ஆபத்தை தவிர்க்கக் குறைந்த எடை (20 கிலோவுக்குள்) மற்றும் குறைந்த ஆற்றலில் இயங்கக்கூடிய பாதுகாப்பு அமைப்புகளுக்கான வடிவமைப்புகளை நாசா கேட்டுக்கொண்டுள்ளது.
இப்போட்டிக்கானப் பதிவுகள் அக்டோபர் 5 அன்று தொடங்கப்பட்ட நிலையில், திட்டங்களைச் சமர்ப்பிக்க 2027 ஜனவரி 15 இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கட்டங்களாக நடைபெறும் இப்போட்டியில் தேர்வாகும் தொழில்நுட்பங்கள் வருங்கால நிலவு மற்றும் செவ்வாய் கிரகப் பயணங்களில் பயன்படுத்தப்படவுள்ளன.