கூகுள் டிரைவில் இருந்து தொலைந்து போன பயனாளர்களின் தகவல்கள்; கூகுளின் விளக்கம் என்ன?
சமீப காலங்களில் இணையதள பயனாளர்களின் பிராதன சேமிப்புத் தளமாக கூகுள் டிரைவ் போன்ற கிளவுடு சேமிப்புத் தளங்கள் மாறியிருக்கின்றன. ஹார்டு டிரைவுகளை விடுத்து பலரும் கிளவுடு சேமிப்பு சேவைகளுக்கு மாறி வரும் நிலையில், உலகெங்கிலும் பல கோடி பயனாளர்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கிளவுடு சேமிப்புத் தளமான கூகுள் டிரைவில் சேமிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் கோப்புகள் காணாமல் போயிருப்பதாக பயனாளர்கள் சிலர் புகாரளித்து வருகின்றனர். மேலும், சில கடந்த மே 2023-க்கும் பிறகு பல மாதங்களாக கூகுள் டிரைவில் தான் சேமித்த தகவல்களும் கோப்புகளும் காணாமல் போயிருப்பதாக கூகுளின் உதவிப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
நடவடிக்கை எடுத்து வரும் கூகுள்:
இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக கூகுள் நிறுவனம் இதுவரை எந்த அறிவிப்பு வெளியிடவில்லை. ஆனால், கூகுளின் உதவிப்பக்கத்தில், அந்நிறுவன ஊழியர் ஒருவர், இந்தப் பிரச்சினை குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இடைப்பட்ட நிலையில் பயனாளர்கள் தங்களது கூகுள் டிரைவ் அமைப்புகளில் எந்த வித மாற்றமும் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறார் அவர். இந்த பிரச்சினைகள் குறித்து கூகுள் எந்த வித விளக்கமும் அளிக்காததால், தொலைந்து போன தங்களுடைய தகவல்களை மீட்க முடியுமா என்ற சந்தேகத்திலும், அச்சத்திலும் இருக்கின்றனர் கூகுள் டிரைவ் பயனாளர்கள். ஹார்டு டிரைவுக்கு மாற்றாக பாதுகாப்பான சேமிப்புத் தளமாக இருக்கும் என்றே கிளவுடு சேமிப்பு சேவைகளை பயனாளர்கள் பயன்படுத்தத் தொடங்கினர், தற்போது அதுவும் பாதுப்பற்ற ஒன்றாகத் தோன்றும் நிலை உருவாகியிருக்கிறது.