LOADING...
மைக்ரோசாஃப்ட் கோபைலட் இனி வெறும் 'பொழுதுபோக்கு' கருவி மட்டுமா? பயன்பாட்டு விதிகளில் அதிரடி மாற்றம்! பயனர்களுக்கு எச்சரிக்கை
மைக்ரோசாஃப்ட் கோபைலட் வெறும் பொழுதுபோக்கு கருவி மட்டுமே என பயன்பாட்டு விதிகளில் அதிரடி மாற்றம்

மைக்ரோசாஃப்ட் கோபைலட் இனி வெறும் 'பொழுதுபோக்கு' கருவி மட்டுமா? பயன்பாட்டு விதிகளில் அதிரடி மாற்றம்! பயனர்களுக்கு எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Apr 05, 2026
06:47 pm

செய்தி முன்னோட்டம்

தொழில்நுட்ப உலகில் உற்பத்தித் திறனை அதிகரிக்கப் பெரிதும் பேசப்பட்டு வந்த மைக்ரோசாஃப்ட் கோபைலட் ஏஐ, இப்போது ஒரு பொழுதுபோக்குக் கருவியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது கோபைலட் கருவிகளுக்கான பயன்பாட்டு விதிமுறைகளை அண்மையில் மாற்றியுள்ளது. இதில் கோபைலட் என்பது "பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மட்டுமே" வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், பயனர்கள் இதனைத் தங்களது "சொந்தப் பொறுப்பில்" பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எக்செல் மற்றும் பவர்பாயிண்ட் போன்ற செயலிகளில் வேலைகளை எளிதாக்க விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு கருவிக்கு இப்படி ஒரு விளக்கம் அளிக்கப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாற்றத்திற்கான காரணம்

ஏன் இந்த மாற்றத்தை மைக்ரோசாஃப்ட் செய்தது?

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் 'ஹாலுசினேஷன்' எனப்படும் தவறான அல்லது கற்பனையான தகவல்களைத் தரும் சிக்கல் இன்னும் முழுமையாக சரியாகவில்லை. ஓபன்ஏஐ நிறுவனத்தின் ஜிபிடி அல்லது ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் கிளாட் போன்ற பெரிய எல்எல்எம் மாடல்கள் சில நேரங்களில் உண்மைக்கு மாறான தகவல்களைத் தருகின்றன. கோபைலட் தரும் இத்தகைய தவறான தகவல்களால் ஏற்படும் சட்டரீதியான சிக்கல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவே மைக்ரோசாஃப்ட் இந்த மாற்றத்தை செய்துள்ளதாகக் கருதப்படுகிறது. அக்டோபர் 2025 முதலே இந்த மாற்றங்கள் மைக்ரோசாஃப்ட் இணையதளத்தில் இடம்பெற்று வந்தாலும், தற்போதுதான் இது பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

விளக்கம்

வேலைகளுக்குப் பயன்படுத்தலாமா? மைக்ரோசாஃப்ட் சொல்லும் விளக்கம்

கோபைலட்டை வேலைகளுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்று மைக்ரோசாஃப்ட் நேரடியாகச் சொல்லவில்லை. ஆனால், ஏஐ தரும் தகவல்களை அப்படியே கண்மூடித்தனமாக நம்பாமல், முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு தரவுகளை சரிபார்க்க வேண்டும் என்று நிறுவனம் வலியுறுத்துகிறது. அதாவது, கோபைலட்டை ஒரு உதவியாளராக மட்டுமே பார்க்க வேண்டும், முடிவெடுப்பவராக அல்ல என்பதே மைக்ரோசாஃப்ட் தரும் செய்தி. ஏஐ செய்யும் தவறுகளுக்குத் தான் சட்டரீதியாகப் பொறுப்பேற்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்தவே 'பொழுதுபோக்கு' என்ற வார்த்தையை நிறுவனம் பயன்படுத்தியுள்ளது.

Advertisement

எதிர்காலத் திட்டங்கள்

விற்பனை இலக்குகளும் எதிர்காலத் திட்டங்களும்

விதிமுறைகளில் இத்தகைய மாற்றங்களைச் செய்திருந்தாலும், கோபைலட்டை ஒரு வேலைக்கான கருவியாக விற்பனை செய்வதை மைக்ரோசாஃப்ட் நிறுத்தவில்லை. மைக்ரோசாஃப்ட் சிஇஓ ஜட்சன் அல்தாஃப், கோபைலட் விற்பனையில் நிறுவனம் மிகப்பெரிய இலக்குகளை எட்டியுள்ளதாகத் தனது உள்நிலை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். டிசம்பர் 31, 2025 நிலவரப்படி 3 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே கோபைலட்டிற்குப் பணம் செலுத்தி வரும் நிலையில், இதனை அதிகரிக்க நிறுவனம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட 'கோபைலட் கோவர்க்' (Copilot Cowork) போன்ற வசதிகள் மூலம் ஐடி நிறுவனங்களுக்கு ஏஐ சேவைகளை விரிவுபடுத்த மைக்ரோசாஃப்ட் திட்டமிட்டுள்ளது. 'வைப் வொர்க்கிங்' (Vibe working) என்ற புதிய பாணியில் ஏஐயை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதே மைக்ரோசாஃப்டின் தற்போதைய சந்தைப்படுத்தல் வியூகமாக உள்ளது.

Advertisement