சாட்ஜிபிடியும் பிரியாணியும்: மைக்ரோசாஃப்ட்டின் சத்யா நாதெல்லா பகிர்ந்த வேடிக்கை சம்பவம்
மைக்ரோசாப்ட் செயல் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சத்யா நாதெல்லா சமீபத்தில், மைக்ரோசாப்டின் மாநாட்டிற்காக பெங்களூரு வந்திருந்தார். அப்போது ஒரு வேடிக்கை நிகழ்வை பற்றி பகிர்ந்தார். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் சாட் பாட்டான சாட்ஜிபிடியிடம், நாடெல்லா, தென்னிந்திய டிபின் பற்றியும், அதனை வரிசை படுத்துமாறும் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த அந்த சாட்பாட், அவர் விரும்பும் அனைத்து உணவுகளையும் பட்டியிலிட்டது. பட்டியலில் பிரியாணியும் இடம் பெற்று இருந்தது. அதை குறிப்பிட்ட நாடெல்லா, " ஏனோ சில காரணங்களால் அது பிரியாணியை டிபினாக கருதுகிறது. ஆனால் நான் ஒரு ஹைதெராபாதி. பிரியாணியை, டிபன் என்று சொல்லி என்னை அவமானப்படுத்த முடியாது." என்று கூறினார். இதை சாட்ஜிபிடியிடம் தெரிவித்ததும், அது தாழ்மையாக மன்னிப்பு கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மைக்ரோசாப்ட்டும் சாட்ஜிபிடியும்
மைக்ரோசாப்டின் எதிர்கால தயார்நிலை தலைமைத்துவ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார், சத்யா நாதெல்லா. தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் மற்றும் அது அன்றாட வாழ்வில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி பேசினார். மேலும், இந்தியாவில் நடைபெற்று வரும் அதிநவீன AI மற்றும் கிளவுட் கண்டுபிடிப்புகள் பற்றியும் அவர் விளக்கினார். ChatGPT என்பது செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சாட்போட் ஆகும், இது பல்வேறு விஷயங்களில் மனிதர்களுடன் உரையாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தேடுபொறியான பிங்கில், இந்த சாட் ஜிபிடி (ChatGPT) பயன்படுத்தும், செயற்கை நுண்ணறிவை உட்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம், தேடுதல் எளிமையாக்கப்படும் என கூறப்படுகிறது.