ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை.. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவிப்பு!
AI போட்டியில் கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் சரிசமமாகப் போட்டியிட்டு வருகின்றன. ஓபன்ஏஐ நிறுவனத்துடன் கைகோர்த்ததையடுத்து, அந்நிறுவனத்திலும் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்து வருகிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் முழுநேர ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஊதிய உயர்வு இல்லை என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து தங்கள் ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார் மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா. அந்தக் கடிதத்தில் ஊதிய உயர்வு இல்லை என்றும், போனஸ் மற்றும் ஸ்டாக் அவார்டுகளுக்கான பட்ஜெட்டைக் குறைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் நாதெல்லா.
மைக்ரோசாஃப்டின் திட்டம் என்ன?
கடந்த ஜனவரி மாதம் தான் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அறிவிப்பை வெளியிட்டது மைக்ரோசாஃப்ட். அதனைத் தொடர்ந்து தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தங்களின் இந்த முடிவுக்கு மாறிவரும் பொருளாதார நிலையை சுட்டிக் காட்டியிருக்கிறார் சத்யா நாதெல்லா. தற்போது தங்கள் கவனம் முழுவதையும் ஜெனரேட்டிவ் AI-ஐ மேம்படுத்துவதன் மீது குவித்திருக்கிறது மைக்ரோசாஃப்ட். கடந்த வாரம் தான் AI வசதியுடன் கூடிய தங்களின் பிங் தேடுபொறி சேவையை அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது அந்நிறுவனம். AI வசதியை தங்களுடைய ஆபிஸ் சேவைகளிலும் கொண்டுவரத் திட்டமிட்டு மைக்ரோசாஃப்ட் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.