36 மணி நேர சேவை முடக்கத்திற்கு இழப்பீடு வழங்கும் மைக்ரோசாஃப்ட்; எப்படி பெறுவது?
செய்தி முன்னோட்டம்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சேவைகளில் 36 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சர்வர் முடக்கம் தற்போது முழுமையாக சீரடைந்துள்ளது. இந்த சேவைத் தடையால் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வணிக நிறுவனங்கள் தங்களது அன்றாட மின்னஞ்சல் மற்றும் அலுவலகப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டன. சேவை பாதிக்கப்பட்ட காலத்திற்கு மைக்ரோசாஃப்ட் தாமாக முன்வந்து பணம் வழங்காது என்றாலும், தகுதியுள்ள நிறுவனங்கள் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி இழப்பீட்டைக் கோரி பெற முடியும்.
சேவைக் கடன்கள்
வணிக சந்தாக்களுக்கான எஸ்எல்ஏ விதிகளும் 25% முதல் 100% வரையிலான சேவைக் கடன்களும்
மைக்ரோசாஃப்ட் 365 வணிக சந்தாக்களை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு 99.9 சதவீத மாதாந்திர இயக்க நேர உத்தரவாதத்தை (எஸ்எல்ஏ) மைக்ரோசாஃப்ட் வழங்குகிறது.
இந்த உத்தரவாதம் மீறப்பட்டால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் சேவைக் கடன்களை (Service Credits) பெறத் தகுதியுடையவை.
இது நேரடி பணமாகத் திரும்ப வழங்கப்படாமல் எதிர்கால சந்தாக் கட்டணங்களில் கழித்துக் கொள்ளப்படும்.
சேவை முடங்கிய கால அளவிற்கு ஏற்ப 25%, 50% அல்லது 100% வரை கட்டண சலுகை கிடைக்கும்.
வணிக சந்தாக்கள்
தனிநபர் கணக்குகளுக்கும் வணிக சந்தாக்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகள்
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 'பயனர்-நிமிடங்கள்' (User-minutes) அடிப்படையில் ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனியாக இழப்பீட்டைக் கணக்கிடுகிறது.
இதனால் அவுட்லுக் மட்டும் முடங்கியிருந்தால் ஒட்டுமொத்த மைக்ரோசாஃப்ட் 365 தொகுப்பிற்கும் இழப்பீடு கிடைக்காது.
மேலும் மைக்ரோசாஃப்ட் 365 பிசினஸ், எக்ஸ்சேன்ஜ் ஆன்லைன் மற்றும் டீம்ஸ் பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த உரிமை உண்டு.
தனிநபர் மற்றும் குடும்ப திட்டப் பயனர்களுக்கு மைக்ரோசாஃப்ட் விருப்பத்தின் பேரிலேயே சலுகை பரிசீலிக்கப்படும்.
காலக்கெடு
Admin Centre மூலம் விண்ணப்பிக்கும் முறை மற்றும் டிசம்பர் 31, 2026 காலக்கெடு
நேரடியாக மைக்ரோசாஃப்டிடம் சந்தா வாங்கிய நிறுவனங்கள் Microsoft 365 Admin Centre-ல் உள்ள Billing விவரங்களை சரிபார்த்துவிட்டு, Help & Support பகுதி வழியாக மின்னஞ்சலில் புகாரளிக்க வேண்டும்.
அதில் எக்ஸ்சேன்ஜிற்கு EX1550543, அவுட்லுக்கிற்கு MO1550821 மற்றும் டீம்ஸுக்கு TM1550488 ஆகிய சம்பவ எண்களையும் பாதிக்கப்பட்ட பயனர்களின் எண்ணிக்கையையும் குறிப்பிடுவது அவசியம்.
விநியோகஸ்தர்கள் மூலம் வாங்கியவர்கள் அவர்கள் வழியாகவும், அனைத்து நிறுவனங்களும் டிசம்பர் 31, 2026-க்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.