வரலாற்றில் புதிய சாதனை: சக்கர நாற்காலி பயன்படுத்தும் நபராக விண்வெளிக்கு செல்லும் முதல் பெண்
செய்தி முன்னோட்டம்
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் 'ப்ளூ ஆரிஜின்' (Blue Origin) நிறுவனம் இன்று விண்ணில் ஏவவுள்ள ராக்கெட்டில், சக்கர நாற்காலியை பயன்படுத்தும் முதல் நபராக மைக்கேலா பெந்தாஸ் (Michaela Benthaus) விண்வெளிக்கு பயணம் செய்ய உள்ளார். ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) விண்வெளி பொறியாளரான மைக்கேலா, கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விபத்தில் முதுகுத்தண்டில் காயம் அடைந்தவர். அன்றிலிருந்து சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வரும் இவர், விண்வெளி பயணம் என்பது உடல் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமானது அல்ல, அது அனைவருக்கும் பொதுவானது என்பதை நிரூபிக்க இம்முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
முக்கியத்துவம்
விண்வெளி பயணத்தின் முக்கியத்துவம்
இந்த விண்வெளிப் பயணம் மாற்றுத்திறனாளிகளுக்கான விண்வெளி அணுகுமுறை குறித்து நீண்ட காலமாக நிலவி வந்த தடைகளை உடைத்துள்ளது. மைக்கேலா தனது பயணத்தின் அடையாளமாக ஒரு டென்னிஸ் பந்து மற்றும் தனது பொம்மை ஆகியவற்றை எடுத்துச் செல்கிறார். விண்வெளி சுற்றுலா (Space Tourism) இனி வரும் காலங்களில் உடல் ரீதியான சவால்களை தாண்டி அனைவரையும் சென்றடையும் என்பதற்கு மைக்கேலாவின் இந்தப் பயணம் ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்துள்ளது.
விவரங்கள்
பயணம் குறித்த விவரங்கள்
ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் 'நியூ ஷெப்பர்ட்' (New Shepard) என்ற விண்கலம் மூலம் இந்த வரலாற்று பயணம் நிகழவுள்ளது. இந்திய நேரப்படி இன்று (டிசம்பர் 18) இரவு 9:30 மணிக்கு விண்வெளிப் பயணம் தொடங்க உள்ளது. சுமார் 10 முதல் 12 நிமிடங்கள் நீடிக்கும் இந்த பயணத்தில், மைக்கேலாவுடன் சேர்த்து மொத்தம் 6 பயணிகள் விண்வெளிக்கு செல்கின்றனர். புவியின் எல்லையான 'கார்மன் கோட்டை' (Karman Line - 100 கி.மீ உயரம்) தாண்டிச் சென்று, விண்வெளியின் எடையற்ற தன்மையை (Weightlessness) அனுபவித்துவிட்டு மீண்டும் பூமிக்குத் திரும்புவார்கள்.