தங்கள் AI கருவிகளில் அரசியல் உள்ளடக்கங்களை உருவாக்குவதைத் தடை செய்த மெட்டா
செய்தி முன்னோட்டம்
உலகளவில் மெட்டா, கூகுள், ஓபன்ஏஐ மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பொதுப் பயன்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.
முதலில் சாட்பாட் வடிவில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தற்போது பல்வேறு வடிவங்களிலும் பொதுப் பயன்பாட்டில் இருந்து வருகிறது, இன்னும் பல்வேறு வடிவங்களில் அறிமுகப்படுத்தப்படவும் இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவுக் கருவிகளின் வளர்ச்சியை முன்னிட்டு பெரும்பாலான தொழில்நுட்ப வல்லுநர்கள் முன்வைத்த முக்கியமாக பிரச்சினை, போலி எனக் கண்டறிய முடியாத வகையில் உருவாக்கப்படும் போலியான உள்ளடக்கங்கள் தான்.
மேலும், தேர்தல் சமயங்களில் போலியான தகவல்கள் நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எனவே, அரசியல் தொடர்பான உள்ளடக்கங்களை தங்களுடைய AI கருவிகளில் உருவாக்குவது குறித்து முக்கியமான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது மெட்டா.
மெட்டா
அரசியல் தொடர்பான உள்ளடக்கங்களை உருவாக்கத் தடை:
அடுத்த ஆண்டு விளம்பரங்களுக்கான செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை வெளியிடவிருக்கிறது மெட்டா நிறுவனம். அந்த AI கருவியைக் கொண்டு ஒரு புகைப்படத்தில் கட்டளைகளைப் பயன்படுத்தி எந்த வகையில் வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்ய முடியும்.
அப்படியான கருவியில் அரசியல் தொடர்பான உள்ளடக்கங்களை உருவாக்க தடை செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது மெட்டா. இது AI கருவிகளை உருவாக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களிடையே முக்கியமான ஒரு முடிவாகப் பார்க்கப்படுகிறது.
கூகுள் நிறுவனமும் விளம்பரங்களுக்கான AI கருவியை அறிமுகப்படுத்தியிருந்தது. அதிலும், அரசியல் தொடர்பான உள்ளடக்கங்களை உருவாக்க முடியாத வகையில் அந்நிறுவனம் தடை செய்திருக்கிறது.
AI உருவாக்கப்படும் உள்ளடக்கங்களில், அவை AI கருவியால் உருவாக்கப்பட்டவை என்பதைக் குறிப்பிடும் வகையில் புதிய வசதிகளை மெட்டா உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.