மெட்டா பணிநீக்கம்: 6 ஆண்டுகள் பணியாற்றியும் தானாக முன்வந்து வேலையை விட்ட ஜூலி போன் யார்? பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
மெட்டா நிறுவனம் உலகளவில் 8,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு 6 ஆண்டுகள் கன்டென்ட் டிசைனராகப் பணியாற்றிய ஜூலி போன் தானாக முன்வந்து தன்னை இந்த பட்டியலில் சேர்க்கக் கூறி விலகியுள்ளார். நிறுவனத்தின் நீண்டகால இலக்குகளும் தன்னுடைய சொந்த மற்றும் தொழில்முறை இலக்குகளும் வெவ்வேறு திசைகளில் பயணிப்பதே தான் இந்த அதிரடி முடிவை எடுக்கக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார். தான் விலகுவதன் மூலம் வேலை செய்ய விரும்பும் மற்றொரு தகுதியான சக ஊழியரின் வேலை தப்பிக்கும் என்ற நல்லெண்ணத்திலும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தனது லிங்க்டின் பதிவில் பகிர்ந்துள்ளார்.
ஜூலி போன் பின்னணி
வாஷிங்டன் போஸ்ட் முதல் மெட்டா வரை: யார் இந்த ஜூலி போன்?
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த ஜூலி போன், டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்ற ஒரு திறமையான ஊடகவியலாளர் ஆவார். மெட்ரோ வாஷிங்டன் இதழில் ஃப்ரீலான்ஸ் ப்ரூஃப் ரீடராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் வாஷிங்டன் டைம்ஸ் மற்றும் புகழ்பெற்ற வாஷிங்டன் போஸ்ட் இதழ்களில் சீனியர் எடிட்டராகப் பணியாற்றினார். கடந்த 2020 ஆம் ஆண்டில் மெட்டா நிறுவனத்தில் இணைந்த அவர், ஃபேஸ்புக் தளத்தின் பிராண்ட் வாய்ஸ் மற்றும் உள்ளூர்மயமாக்கல் பிரிவுகளில் கன்டென்ட் டிசைனராக 6 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றினார்.
நிறுவன கொள்கை முரண்பாடு
செயற்கை நுண்ணறிவு என்ற 'AI-First' கொள்கை மற்றும் ஜூலியின் கவலைகள்
மெட்டா நிறுவனம் தற்பொழுது கன்டென்ட் உருவாக்கத்தை விட முற்றிலும் 'AI-First' என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு அதிக முன்னுரிமை கொடுத்துத் தனது பணி கலாச்சாரத்தை மாற்றி வருகிறது. ஊழியர்கள் அனைவரும் ஐடியாக்களை உருவாக்கவும், கோடிங் பிரச்சனைகளைத் தீர்க்கவும் ஏஐ டூல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுவதாக ஜூலி சுட்டிக்காட்டியுள்ளார். ஏஐ டூல்களைக் கற்றுக்கொள்வது மட்டுமே ஒருவரின் வேலைப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்காது என்றும், மனிதர்களின் படைப்பாற்றல் மற்றும் எடிட்டோரியல் சிந்தனைகளுக்கு மதிப்புள்ள இடத்தில்தான் இனி பணியாற்ற விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.