மெட்டா நிறுவனத்தின் புதிய அதிரடி! இன்ஸ்டாகிராம் பிளஸ், பேஸ்புக் பிளஸ், வாட்ஸ்அப் பிளஸ் திட்டங்கள் அறிமுகம்: முழு கட்டண விபரம்
செய்தி முன்னோட்டம்
சமூக ஊடகத்துறையில் புதிய புரட்சியாக மெட்டா நிறுவனம் தனது பிரபல செயலிகளான இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றிற்குப் பிரத்யேக 'பிளஸ்' (Plus) சந்தா திட்டங்களை உலகளவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் இன்ஸ்டாகிராம் பிளஸ் மற்றும் பேஸ்புக் பிளஸ் ஆகிய திட்டங்களுக்கு மாதத்திற்கு $3.99 (சுமார் ரூ.330) கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப் பிளஸ் சந்தா திட்டத்தைப் பயன்படுத்த விரும்பும் பயனர்கள் மாதத்திற்கு $2.99 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.250) கட்டணமாகச் செலுத்த வேண்டும் என மெட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 'மெட்டா வெரிஃபைட்' (Meta Verified) ப்ளூ டிக் சேவையை எந்த வகையிலும் பாதிக்காது என்றும், அது வழக்கம்போல் செயல்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக் அம்சங்கள்
இன்ஸ்டாகிராம் பிளஸ் மற்றும் பேஸ்புக் பிளஸ் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கும் அதிரடி வசதிகள்
இன்ஸ்டாகிராம் பிளஸ் சந்தாவை வாங்கும் பயனர்கள், தங்களது இன்ஸ்டா ஸ்டோரியை எத்தனை பேர் மறுபடி பார்த்தார்கள் என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். இத்துடன் தங்களது ஸ்டோரிகளைப் பிறருக்குத் தெரியாமல் ரகசியமாகப் பார்ப்பது, ஸ்டோரி ஆயுளை 24 மணி நேரத்திற்கும் மேலாக நீட்டிப்பது போன்ற பிரத்யேக வசதிகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஃபாலோயர்களின் ஃபீடில் தோன்றாமல் நேரடியாக ப்ரொஃபைல் ஹைலைட்ஸில் பதிவிடுவது மற்றும் கஸ்டம் பயோ ஃபான்ட்டுகள் (Fonts) போன்ற கணக்குத் தனிப்பயனாக்க வசதிகளைப் பேஸ்புக் பிளஸ் பயனர்களும் பெறலாம்.
வாட்ஸ்அப் பிளஸ் வசதிகள்
தீம்கள் மற்றும் கஸ்டம் ரிங்டோன்களுடன் அசத்தலாக வந்துள்ள வாட்ஸ்அப் பிளஸ் அம்சங்கள்
வாட்ஸ்அப் பிளஸ் சந்தாதாரர்களுக்குத் தங்களது செயலியை முழுமையாகத் தனிப்பயனாக்கம் (Personalisation) செய்யக்கூடிய பல சுவாரஸ்யமான பிரீமியம் வசதிகளை மெட்டா வழங்கியுள்ளது. இதன்படி, பயனர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஆப் தீம்கள் (App themes), பிரத்யேக ரிங்டோன்கள் (Custom ringtones) மற்றும் பிரீமியம் ஸ்டிக்கர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுமட்டுமின்றி, முக்கியமான சாட்களை அதிக எண்ணிக்கையில் பின் (Pinned chats) செய்து வைக்கும் வசதி மற்றும் சாட் லிஸ்ட்டுகளைத் தங்களுக்குத் தகுந்தாற்போல் மாற்றியமைக்கும் வசதிகளும் இதில் அடங்கும்.
மெட்டா ஏஐ கட்டணங்கள்
அதிநவீன ஏஐ திறன்களுக்காக மெட்டா அறிமுகம் செய்யும் பிரீமியம் ஏஐ சந்தாக்கள்
சாதாரண பயனர்களுக்கு மெட்டா ஏஐ சேவை தொடர்ந்து இலவசமாகக் கிடைக்கும் அதே வேளையில், அதிநவீன ஏஐ பணிகளுக்காகப் புதிய கட்டணத் திட்டங்கள் சோதனை செய்யப்பட உள்ளன. இதன்படி 'மெட்டா ஒன் பிளஸ்' ($7.99/மாதம்) மற்றும் 'மெட்டா ஒன் பிரீமியம்' ($19.99/மாதம்) ஆகிய திட்டங்கள் மூலம் உயர்தர இமேஜ் மற்றும் வீடியோ ஜெனரேஷன் வசதிகளைப் பெறலாம். இந்த புதிய ஏஐ திட்டங்கள் அடுத்த வாரம் முதல் சிங்கப்பூர், குவாத்தமலா மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளில் முதல்கட்டமாகச் சோதனை செய்யப்பட உள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.
பிசினஸ் மற்றும் கிரியேட்டர் பிளான்
வணிக நிறுவனங்கள் மற்றும் கிரியேட்டர்களுக்காக அறிமுகமாகும் மெட்டா ஒன் பிரீமியம் திட்டங்கள்
கிரியேட்டர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்த 'மெட்டா ஒன் எசென்ஷியல்' ($14.99/மாதம்) மற்றும் 'மெட்டா ஒன் அட்வான்ஸ்டு' ($49.99/மாதம்) ஆகிய இரு திட்டங்கள் அறிமுகமாகின்றன. எசென்ஷியல் திட்டத்தில் வெரிஃபைட் பேட்ஜ் மற்றும் கணக்கு ஆள்மாறாட்டப் பாதுகாப்பு வசதிகளும், அட்வான்ஸ்டு திட்டத்தில் தேடல்களில் அதிக விசிபிலிட்டி மற்றும் மேம்பட்ட அனலிட்டிக்ஸ் டூல்களும் கிடைக்கின்றன. இந்த வணிக ரீதியிலான திட்டங்களின் சோதனையானது இந்த வார இறுதியில் சவுதி அரேபியா, மொராக்கோ, தாய்லாந்து மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் தொடங்கப்பட உள்ளது.