ஐரோப்பிய ஒன்றியத்தில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த கட்டண சேவையை அறிமுகப்படுத்திய மெட்டா, ஏன்?
ஐரோப்பிய ஒன்றியத்தில் விளம்பரங்கள் இல்லாமல் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களை பயன்படுத்த விரும்பும் பயனாளர்களுக்காக புதிய கட்டண திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது மெட்டா. ஐரோப்பிய ஒன்றியமானது மெட்டா நிறுவனத்தின் பயனாளர் தகவல் சேகரிப்பு முறைகள் மற்றும் குறிப்பிட்ட பயனாளரை மையப்படுத்திய விளம்பரங்கள் குறித்து அச்சம் தெரிவித்திருக்கிறது. மேலும், டிஜிட்டல் பயனாளர்களின் தகவல் சேகரிப்பு மற்றும் பயன்பாடு குறித்த டிஜிட்டல் சட்டங்களை பலவற்றையும் அமல்படுத்தியிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள, விளம்பரங்களை விரும்பாத பயனாளர்களுக்காகவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சட்டங்களுக்குக் கட்டுப்படும் விதமாகவும் இந்த கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் வகையிலான திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது மெட்டா.
எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
வலைத்தளப் பயனாளர்களுக்கு இந்திய மதிப்பில் மாதம் ரூ.880 கட்டணத்திலும், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனாளர்களுக்கு மாதம் ரூ.1,145 கட்டணத்திலும் விளம்பரமற்ற ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை அளிக்கிறது மெட்டா. முதலில் இணைக்கப்பட்ட அனைத்து கணக்குகளுக்கு ஒரே கட்டணமே போதும். ஆனால், 2024 மார்ச் 1ம் தேதியிலிருந்து கூடுதலாக இணைக்கப்படும் கணக்குகளுக்கு இந்திய மதிப்பின் படி கூடுதலாக ரூ.530 செலுத்த வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறது மெட்டா. கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் வரை குறிப்பிட்ட பயனாளரின் தகவல்களை பயன்படுத்த மாட்டோம் எனத் தெரிவித்திருக்கிறது மெட்டா. கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தாலும், இலவசமாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்த விரும்பும் பயனாளர்களுக்கு விளம்பரங்களுடன் கூடிய இலவச சேவையும் தொடர்ந்து அளிக்கப்படும் என மெட்டா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.