குழந்தைகளை அடிமையாக்கும் வகையில் சமூக வலைத்தளங்களை வடிவமைக்கும் மெட்டா?
குழந்தைகளை அடிமைப்படுத்தும் வகையிலேயே தங்களது சமூக வலைத்தளங்களை மெட்டா நிறுவனம் வடிவமைப்பதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்காவின் 33 மாநிலங்களைச் சேர்ந்த வழங்குரைஞர்கள் அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். 13 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளே (பெற்றோரின் கண்காணிப்புடன்) தங்களது சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகளைக் கொண்டிருக்கிறது மெட்டா. எனினும், 13 வயதுக்குட்பட்ட பல லட்சம் குழைந்தகள் அத்தளத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். இது அந்நிறுவனத்திற்கு தெரிந்திருந்தும், இது குறித்து பல்வேறு தரப்பினர் புகார் அளித்தும், அந்தக் கணக்குகள் மீது மிகக் குறைந்த அளவிலான நடவடிக்கையே அந்நிறுவனம் எடுத்திருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.
மெட்டா நிறுவனத்தின் ஆவணங்கள்:
இந்த குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு ஆவணத்தில், குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற விதத்தில் தங்களுடைய தயாரிப்புகளை வடிவமைப்பதாக மெட்டா நிறுவனமே ஒப்புக் கொண்டிருக்கிறது. எனினும், ஆன்லைனில் பருவவயதினர் பாதுகாப்பாக இயங்கும் வகையில் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு விதமான ஆன்லைன் கருவிகளை தாங்கள் உருவாக்கியிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது மெட்டா. மேலும், சமூக வலைத்தளக் கணக்குகளைப் பயன்படுத்துவர்களின் வயதைக் கண்டறிவது மிகவும் சவாலான காரியம் எனத் தெரிவிக்கும் அந்நிறுவனம், தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோர்களே எனவும் தெரிவித்திருக்கிறது. ஆனால், குழந்தைகள் பயன்படுத்தும் கணக்குகள் குறித்த புகார்கள் அளிக்கப்பட்ட போது 25 லட்சம் கணக்குளின் மீது மெட்டா இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.