
கனடா மக்களுக்கு செய்திப் பதிவு மற்றும் பகிர்வுக்கான அணுகலைத் தடுத்திருக்கும் மெட்டா
செய்தி முன்னோட்டம்
இனி கனடா மக்களால் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் செய்திகளை வாசிக்கவோ அல்லது செய்திப் பதிவுகளைப் பகிரவோ முடியாது என அறிவித்திருக்கிறது மெட்டா. அடுத்த சில வாரங்களில் அனைத்து கனட பயனர்களும் தங்கள் தளங்களில் செய்திகளை அனுகுவதிலிருந்து தடுக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தங்கள் நாட்டு செய்தி நிறுவனங்கள் பதிவிடும் பதிவுகள் மூலமும் அதிக பார்வையாளர்களைப் பெறுகிறது மெட்டா.
எனவே, அச்செய்தி நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட தொகையை, மெட்டாவும் பிற டிஜிட்டல் தளங்களும் பகிர வேண்டும் எனக் கூறி இணைய செய்திச் சட்டம் ஒன்றை அமல்படுத்தியிருக்கிறது கனடா அரசு.
மெட்டா
மெட்டாவின் பதிலடி:
செய்தி நிறுவனங்கள் பதிவிடும் பதிவுகளால் மெட்டா அடையும் லாபத்தை விட, தங்கள் தளங்களில் பதிவிடுவதன் மூலம் செய்தி நிறுவனங்களுக்குக் கிடைக்கும் லாபமே அதிகம் என வாதிடுகிறது மெட்டா.
கனடா அரசின் புதிய சட்டத்திற்கு உட்பட்டு அந்நாட்டு செய்தி நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட தொகையைச் செலுத்த மெட்டா விரும்பவில்லை. எனவே, தங்களுடைய தளங்களில் அந்நாட்டு மக்கள் செய்திப் பதிவு மற்றும் பகிர்வுக்கான அணுகலைத் தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது மெட்டா.
ஆஸ்திரேலியாவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற ஒரு சட்டத்தை இயற்றி, அங்கும் செய்திப் பகிர்வுக்கான அனுகலை மெட்டா நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. மெட்டாவைத் தொடர்ந்து கூகுளும், கனடாவில் இதே போன்ற நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருகிறது.