LOADING...
ஏர்டெல்லைத் தொடர்ந்து ஜியோ மற்றும் விஐ சேவைகளும் பாதிப்பு; சமூக வலைதளங்களில் பயனர்கள் புகார்
ஏர்டெல்லைத் தொடர்ந்து ஜியோ மற்றும் விஐ சேவைகளும் பாதிப்பு

ஏர்டெல்லைத் தொடர்ந்து ஜியோ மற்றும் விஐ சேவைகளும் பாதிப்பு; சமூக வலைதளங்களில் பயனர்கள் புகார்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 18, 2025
08:56 pm

செய்தி முன்னோட்டம்

ஏர்டெல் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் விஐ (Vi) உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகளும் திங்களன்று (ஆகஸ்ட் 18) பாதிக்கப்பட்டன. வாடிக்கையாளர்கள் அழைப்புகள் மற்றும் மொபைல் இணைய சேவைகளில் சிக்கல்களை எதிர்கொண்டதாகத் தெரிவித்தனர். டவுன்டிடெக்டர் (Downdetector) என்ற சேவை கண்காணிப்பு தளத்தின்படி, மாலை 5:00 மணியளவில், ஜியோவில் 200க்கும் மேற்பட்டோரும், விஐ'யில் 50க்கும் மேற்பட்டோரும் பாதிப்புகளைப் புகாரளித்தனர். டவுன்டிடெக்டர் தரவுகளின்படி, ஜியோவில் 52% பயனர்கள் மொபைல் இணையத்திலும், 30% பேர் ஜியோஃபைபரிலும், 17% பேர் சிக்னல் இல்லாமலும் அவதிப்பட்டனர்.

இடங்கள் 

பாதிப்பு ஏற்பட்ட முக்கிய இடங்கள்

ஜியோவைப் பொறுத்தவரை டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ, சண்டிகர், பாட்னா, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் இந்த பாதிப்பு பரவலாக இருந்ததாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. விஐ வாடிக்கையாளர்களில் 44% பேர் மொபைல் இணையத்திலும், 37% பேர் அழைப்புகளிலும், 19% பேர் சிக்னல் இல்லாமலும் சிரமங்களை எதிர்கொண்டனர். இந்தச் சேவை முடக்கத்திற்கான காரணம் குறித்து ஜியோ மற்றும் வி நிறுவனங்கள் இதுவரை எந்த அதிகாரபூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை. பயனர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி, அழைப்புகள் துண்டிக்கப்படுவதையும், இணைய வேகம் குறைந்திருப்பதையும் பற்றிப் பதிவிட்டுள்ளனர்.