போன் போயிடுச்சா? பதறாதீங்க; உங்கள் வங்கி கணக்கு மற்றும் ஆதாரை பாதுகாக்க உடனே செய்ய வேண்டியது இவைதான்
செய்தி முன்னோட்டம்
இன்றைய காலத்தில் மொபைல் போன் என்பது வெறும் பேசும் கருவி மட்டுமல்ல, அது உங்கள் வங்கிக் கணக்கு, மின்னஞ்சல், ஆதார் மற்றும் தனிப்பட்ட தகவல்களின் நுழைவாயில். உங்கள் போன் லாக் செய்யப்பட்டிருந்தாலும், திருடர்களால் சிம் கார்டை கழற்றி ஓடிபி மூலம் உங்கள் பணத்தைத் திருட முடியும். எனவே, போன் தொலைந்ததை உணர்ந்த அடுத்த சில நிமிடங்கள் மிக முக்கியமானவை. இதுதான் முதல் மற்றும் மிக முக்கியமான படி. உங்கள் மொபைல் நெட்வொர்க் நிறுவனத்தை அழைத்து சிம் கார்டை பிளாக் செய்யுங்கள். இது நடந்தால் மட்டுமே திருடர்களால் உங்கள் எண்ணிற்கு வரும் ஓடிபிக்களைப் பெற முடியாது.
போன் லாக்
'Find My Device' மூலம் போனை லாக் செய்யவும்
ஆண்ட்ராய்டு பயனர்கள் 'Find My Device' மூலமும், ஐபோன் பயனர்கள் 'Find My iPhone' மூலமும் தங்கள் போனை லாக் செய்யலாம். போன் எங்குள்ளது என்று தெரியவில்லை என்றால், அதில் உள்ள தரவுகளைத் தூரத்திலிருந்தே அழித்துவிடுவது நல்லது. மேலும், உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்டு, உங்கள் கணக்கில் உள்ள யுபிஐ சேவையை தற்காலிகமாக முடக்கச் சொல்லுங்கள். கூகுள் பே, ஃபோன்பே அல்லது பேடிஎம் போன்ற செயலிகளை மற்றொரு சாதனத்தில் லாகின் செய்து, பழைய சாதனத்திலிருந்து லாக் அவுட் செய்யவும். உங்கள் இமெயில் என்பது அனைத்து கணக்குகளுக்கும் 'மாஸ்டர் கீ' போன்றது. உங்கள் போன் தொலைந்தவுடன், உடனடியாக உங்கள் இமெயில் பாஸ்வேர்டை மாற்றி, டூ-ஃபேக்டர் ஆதென்டிகேஷனை (2FA) புதிய போனுக்கு மாற்றவும்.
ஆதார்
ஆதார் பயோமெட்ரிக் லாக்
UIDAI இணையதளத்திற்குச் சென்று உங்கள் ஆதார் பயோமெட்ரிக்கை லாக் செய்யவும். இது உங்கள் கைரேகை அல்லது கருவிழி அங்கீகாரத்தைத் திருடர்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும். திருடர்கள் உங்கள் பான் கார்டைப் பயன்படுத்தி கடன் வாங்கவோ அல்லது போலி கணக்குகளைத் தொடங்கவோ வாய்ப்புண்டு. எனவே, உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டில் ஏதேனும் புதிய என்குயரி வந்துள்ளதா என்பதைக் கண்காணியுங்கள். ஆன்லைன் மூலமாகவோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திலோ சிஎஸ்ஆர் அல்லது எப்ஐஆர் பதிவு செய்யவும். எதிர்காலத்தில் உங்கள் போன் மூலம் ஏதேனும் குற்றங்கள் நடந்தால், இந்தப் புகார் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.