வேலைக்கு லீவு போட்டுட்டு கேம் விளையாடலாம்: ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்த Logitech
செய்தி முன்னோட்டம்
பிரபல தொழில்நுட்ப சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான லாஜிடெக், உலகளவில் உள்ள தனது அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு நாள் கட்டாய விடுப்பு அறிவித்து தனித்துவமான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. முழுநேரப் பணியாளர்கள் முதல் இன்டர்ன்கள் வரை அனைவரும் இந்த விடுப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இந்த விடுப்புநாளில் தங்களுக்கு பிடித்தமான ஏதேனும் ஒரு வீடியோ கேமை விளையாடுவது மட்டுமே ஒரே நிபந்தனை என்றும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
லாஜி கேம் டே
Logi Game Day பின்னணி
'லாஜி கேம் டே' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விசேஷ விடுப்புத் திட்டமானது, அடுத்த ஆண்டு இறுதிக்குள் எந்த நாளில் வேண்டுமானாலும் ஊழியர்கள் தங்களுக்கு வசதியான தேதியில் எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமிங் என்பது நேரத்தை வீணடிக்கும் செயல் என்ற பிம்பத்தை மாற்ற வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என லாஜிடெக் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
வேலை மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டு துறைகளுக்கும் சாதனங்களை வடிவமைக்கும் நிறுவனம் என்ற முறையில், ஒன்றில் காட்டும் ஈடுபாடு மற்றொன்றின் செயல்திறனை மேம்படுத்துவதை தினமும் உணர்வதாக அவர் குறிப்பிட்டார்.
GTA VI வெளியீடு
GTA VI வெளியீடும் நிறுவனத்தின் நிலைப்பாடும்
வரும் நவம்பர் 19-ஆம் தேதி லாஜிடெக் அலுவலகத்தில் நடைபெறும் கேமிங் மற்றும் ஸ்ட்ரீமிங் நிகழ்வில் தலைமை அதிகாரி நேரில் பங்கேற்க உள்ளார்.
அன்றைய தினம் அலுவலக பணிச்சூழல் ஒரு கேமிங் லவுஞ்சாக மாற்றப்படவுள்ளது.
குறிப்பிடத் தகுந்த வகையில், இந்த தேதியில்தான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட GTA VI விளையாட்டும் வெளியாகவுள்ளது.
எனினும், ஊழியர்கள் இந்த விடுப்பை 2027-க்குள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
வரவிருக்கும் GTA VI விளையாட்டின் வெளியீட்டினால் உலகளவில் பணியிடங்களில் உற்பத்தித் திறன் பாதிக்கப்படலாம் என்ற கவலைகள் எழுந்துள்ளன.
அமெரிக்காவில் மட்டும் சுமார் 1.5 மில்லியன் ஊழியர்கள் வேலைக்கு வராமல் தவிர்க்கலாம் என்றும், இதனால் பொருளாதாரத்திற்குப் பெரிய அளவில் இழப்பு ஏற்படலாம் என்றும் கணிப்புகள் கூறின.